பிரதமரின் பணிப்பில் பெண் அரச ஊழியர்கள் சேலை அணிவது கட்டாயம் என்ற சுற்றறிக்கை ரத்து
பெண் அரச ஊழியர்கள் சேலை அல்லது கண்டியச் சேலை (ஒசரி) அணியவேண்டும் என்று பொது
நிர்வாக அமைச்சால் வெளியிடப்பட்ட புதிய சுற்றறிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்
பணிப்பில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை கொழும்பு ஆங்கில வார இதழான சண்டே ரைம்ஸ் வெளியிட்டுள்ளது.
அரச ஊழியர்கள் பணி நேரத்தில் அணிய வேண்டிய ஆடைகள் தொடர்பான 1989ஆம் ஆண்டு
சுற்றறிக்கையில் மாற்றத்துடன் பொது நிர்வாக அமைச்சு கடந்த வாரம் புதிய சுற்றறிக்கையை
வெளியிட்டது.
“ஆண் ஊழியர்கள் பணிநேரத்தில் காற்சட்டை மற்றும் மேற் சட்டை அல்லது தேசிய உடை அணிய
வேண்டும். அதேவேளை, பெண் ஊழியர்கள் சேலை அல்லது கண்டியச் சேலை (ஒசரி) அணிய வேண்டும்.
சீருடை அணிய பணிக்கப்பட்டுள்ள ஊழியர்கள், அந்த சீருடையில்தான் கடமைக்கு வரவேண்டும். அரச
சேவையிலுள்ள பெண் ஊழியர்கள் கர்ப்ப காலத்தில் தங்களுக்கு வசதியான ஆடைகளை அணிந்துவர
சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
சமய மரபுகளுக்கு இணங்க தமது உடைகளை அமைத்துக் கொள்வதற்கு யாரும் விரும்புவார்களாயின்,
அவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட ஆடைகளை அணிந்து, அதன் பின்னர் அந்த சமய அடையாளத்தை
உறுதிப்படுத்தும் விதத்திலும், முழு முகத்தையும் தெளிவாக அடையாளம் காணக் கூடிய
விதத்திலும் மேலதிக ஆடை அணிகலன்களைப் பயன்படுத்தலாம்.
இதேபோன்று, அரச நிறுவனங்களுக்குள் சேவைகளைப் பெறுவதற்காக வருவோரும், தம்மை தெளிவாக
அடையாளம் காட்டக் கூடிய வகையில் ஆடைகளை அணிந்து வர வேண்டும்” என்று அந்த
சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் புதிய சுற்றறிக்கையை இரத்துச் செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
பொது நிர்வாக அமைச்சுக்குப் பணித்துள்ளார்.
அதனையடுத்து 1989ஆம் ஆண்டு சுற்றறிக்கையை மாற்றியமைத்து புதிய சுற்றறிக்கையை
வெளியிடுவதில் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றக் குழு நாளை
தீர்மானிக்கும் என்று பொது நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய சுற்றறிக்கை ரத்துச் செய்யப்பட்டதால் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அபாய அணிந்து
பணிக்குச் செல்ல முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.