புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் கொன்கிறீட் பாதையைக் காணவில்லை!! வானச்சாரதிக்கு நடந்த கதி!!(Photos)

நேற்று மாலை(26.01.2021) வாகனத்தில் கிளிநொச்சி ஜெயந்திநகரின் ஊடாக ஒரு கொங்கிறீற் பாதையால் போய்கொண்டிருந்தபோது திடீரென அப்பாதையைக் காணவில்லை!
ஆச்சரியப்படுவீர்கள் ஆனால் உண்மை!
வாகனத்தின் வேகத்தை உடனடியாகக் குறைத்து வாகனத்தை நிறுத்திக் கொண்டேன். உண்மையாகவே பாதையைக் காணவில்லைத்தான்!
மார்கழிமாதம் பெய்த மழையில் பாலத்துடன் பாதையும் அள்ளுண்டுபோய் கிடக்கின்றது! இப்போது அவ்விடத்தில் பாலமும் இல்லை! பாதையும் இல்லை!
யார்செய்த புண்ணியமோ வாகனத்தை நிறுத்திக்கொண்டதால் தப்பித்துக்கொண்டேன்.
இல்லையென்றால் ‘அமைதியில் இளைப்பாறுவாராக’ என்று ஒரு போஸ்றை இரு வார்த்தைகளில் அநேகமாக போடவேண்டி வந்திருக்கும்!
அது ஒருபுறமிருக்க, இப்பாதை தண்ணீரில் அள்ளுண்டுபோய்க் கிடக்கின்றது! இந்நிலையில், இப்பாதையால் பயணம் செய்ய முடியாது என்றோ/ பாதை பழுதடைந்து கிடக்கிறது என்றோ/ பாதையால் பயணம் செய்யாமல் தடை ஏற்படுத்தப்படவோ இல்லை!
சிலவேளைகளில் அப்படித் தற்காலிகத் தடைகளை ஏற்கனவே சிறிதளவிலேனும் ஏற்படுத்தி இருந்தாலும், இப்போது அவ்வாறான ஒரு நிலையைக் குறித்துக்காட்ட அவ்விடத்தில் ஒரு துரும்பும் இல்லை! இவ்வூரைச் சாராத ஒருவர் இரவு வேளையில் இப்பாதையால் செல்ல நேர்ந்தால்: நிலமை?
இதற்கு, யார் பொறுப்பு?/
இதனை யாரிடம் கேட்பது?/
இதற்கு யாரேனும் பொறுப்புக் கூறுவார்களா?/
இதற்கு யாரும் பொறுப்புக்கூறத் தேவையில்லையா?
இந்நிலையைப் பார்த்து ஆவனை செய்ய இம்மாவட்டத்தில் அரச உயர் அதிகாரிகளோ, இம்மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளோ, பிரதேச சபையோ, இப்பகுதி பொலிஸ் அதிகாரிகளோ, வீதிகளுக்குப் பொறுப்பான பொறியியலாளர்களோ, கிராம மட்டத்து அமைப்புக்களோ இல்லையா?
இதுதான் பொறுப்பு வாய்ந்தவர்களின் கடமையுணர்வா?
யாராவது இவ்வீதியில் பயணித்து இப்பாலத்திற்குள் விழுந்து இறந்துபோனால் மேற்சொன்ன அத்தனை தரப்பினரும் அநேகமாக அனுதாபம் தெரிவிக்க நிச்சயமாக வருவார்கள்! இதுதான் எம் நிலத்தின் இன்றைய நிலைமையா?
ஏதோ இயலுமான தடையை ஏற்படுத்தி வழியை மறித்து விட்டிருக்கின்றேன். அத்தோடு இதற்குள் விழுந்து யாரும் அநியாயமாகச் சாகாதிருக்க ஒரு சிறு வேண்டுதலையும் செய்துவிட்டு வந்திருக்கின்றேன்!
செ. அன்புராசா

Image may contain: outdoorImage may contain: outdoor and natureImage may contain: sky, tree, outdoor and nature