புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் கட்டாயக் கருத்தடைகள்!! நடந்தது என்ன? அதிர்ச்சித் தகவல்கள்!!

2013ஆம் ஆண்டில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார திணைக்களத்தின் கீழ் உள்ள பூநகரி
சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவின் கீழ்வரும் வேரவில் மற்றும் வலைப்பாடு கிராமங்களின்
40 வரையான பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்யப்பட்டனர் என்று பல்வேறு இணையதளங்கள்
தற்பொழுது மீண்டும் ஒருமுறை செய்திவெளியிட்டுள்ள நிலையில் உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது.

குறித்த காலப்பகுதியில் குறிப்பிட மருத்துவர்களால் 35 தொடக்கம் 45 வரையான பெண்களுக்கு
“ஜடெல்” (Jadelle)என்ற தோலுக்கு அடியில் வைக்கப்படும் கருத்தடை சாதனம் உட்செலுத்தப்பட்டது.

மனிதரில் இரு வகையான கருத்தடை முறைகள் பாவிக்கபடுகின்றன அவையாவன நிரந்தரமுறை, தற்காலிக முறை என்பனவாகும். நிரந்தர முறை எனப்படும் பொழுது அது கருத்தடைசத்திரசிகிச்சையினைக் குறிக்கும்.

இது ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலருக்கும் செய்யமுடியும். தற்காலிக முறை எனப்படும்
பொழுது அது பாவிக்கபடும் மாத்திரைகளில் இருந்து கருப்பை மற்றும் தோலின் கீழ் வைக்கபடும்
சாதனங்களைக் குறிக்கும்.

இங்கு பெண்களுக்கு செலுத்தப்பட்டது “ஜடெல்” என்ற தற்காலிக கருத்தடையினை தோற்றுவிக்கும் சாதனம் ஆகும். அவ்வாறாயின் அரசியல்வாதிகள் மற்றும் தொடர்பு சாதனங்கள் வரை தொண்டை கிழிய கத்தியது ஏன்?இவ்வாறன சாதனங்கள் மூலம் எவ்வாறு சனத்தொகையில் மாற்றத்தினை கொண்டு
வரமுடியுமா?

இங்கு பெண்கள் முதலில் மருத்துவ முகாம் ஒன்று இருப்பதாகவும் அதற்கு கட்டாயம் வருகை
தரவேண்டும் என்ற அடிப்படையிலேயே அழைக்கபட்டிருந்தனர்.

அங்கு அவர்கள் மருத்துவர் குழுவினால் பரிசோதிக்கபட்டு குறுகிய நேர இடைவேளையில்
மருத்துவர்களினால் “ஜடெல்”என்ற சாதனத்தினை உட்செலுத்தினர். அங்கு அவர்களுக்கு தமது
கணவருடன் கலந்துரையாட போதிய கால அவகாசம் கூட வழங்கபடவில்லை. மேலும் அவர்களிடம்
இருந்து எழுத்துமூலமான சம்மதமும் பெறப்படவில்லை.

மேலும் மருத்துவ குழுவினரால் பயப்பட ஏதும் இல்லை என்று சொல்லி வீட்டிற்கு அனுப்பபட்டனர்.
இங்கு மிருகங்களில் நாய்களுக்கு தெருத்தெருவாக சென்று கூட்டாக கருத்தடை செய்வது போன்றே
தாய்மாரும் மருத்துவ முகாம் என்று பொய்கூறி அழைக்கபட்டு கட்டாய கருத்தடைக்கு
உட்படுத்தப்பட்டனர்.

சாதாரணமாக மருத்துவர்கள் கருத்தடை சாதனங்களை பரிந்துரை செய்யும் பொழுது தன்னிடம் உள்ள
கருத்தடை சாதனங்களினை பாவிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி
நோயாளிகளுக்கு விளங்கபடுத்தவேண்டும்.

அத்துடன் தன்னிடம் இல்லாத அருகில் உள்ள வைத்தியசாலை அல்லது மருத்துவரிடம் உள்ள கருத்தடை
சாதனைகளினை பற்றியும் கூறவேண்டும்.

அத்துடன் நோயாளிக்கு தக்க தீர்மானத்தினை எடுக்க போதியகால அவகாசம் கொடுக்கவேண்டும். அதன்
பின்னரே நோயாளி தெரிவு செய்த கருத்தடைமுறையினை சிபாரிசு செய்யவேண்டும்.

மேலும் ஒவ்வொரு நோயாளியுடனும் தனிப்பட்ட முறையில் கலந்தாலோசிக்கவேண்டும். இது குடும்ப
வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதால் தேவையேற்படின் மனைவி வாழ்க்கை
துணையின்ஆலோசனையைப் பெறவும் இடமளிக்கவேண்டும்.

இவ்விடயம் பூதாகரமாக ஊடங்களில் வெளியானதை தொடர்ந்து மருத்துவ மாது வீடுவீடாகச் சென்று
கருத்தடைசாதனம் செலுத்தபட்ட தாய்மாரிடம் இருந்து சுயவிருப்பின் பேரில் உட்செலுத்தியதாக
சம்மதக் கடிதம் வாங்கினார்.

மேலும் தமது உடலில் தமது அனுமதியின்றி செலுத்தபட்ட சாதனத்தினை வெளியே எடுக்கும்படி
மருத்துவரிடம் கேட்ட பொழுது, அவர் 5 வருடங்களுக்கு அதுவேலை செய்யும் அதுவரை அதனை
வெளியே எடுக்க முடியாது என்று கூறிவிட்டார். பின்னர் இவ்விடயம் ஐக்கிய நாடுகள் சபைவரை
சென்ற பின்னரே வேறு மருத்துவர்கள் மூலம் அதனை வெளியே எடுத்தார்கள்.

இங்கு பாவிக்கபட்டது தற்காலிக கருத்தடை ஆயினும் அது குறிப்பிடதக்க காலப்பகுதிக்கு
அதாவது ஏறத்தாழ 5 வருடங்களுக்கு கருதங்குவதினைத் தடுக்ககூடியது.

இதம் மூலம் இயற்கையாக அந்தப் பெண்களில் உருவாகும் குழந்தைகள் உருவாகாமல்
தடுக்கபடுவார்கள். பெண்கள் குறித்த வயதினுள் கர்ப்பம்தரித்து பிள்ளை பெறுவதினையே
விரும்புவார்கள். உதாரணமாக 29 வயதில் உள்ள பெண் ஒருவருக்கு இது உட்செலுத்திய பின்னர் 5
வருடங்களில் வெளியே எடுக்கபடும் அதாவது அவளது 34 வயதில்தான் வெளியேஎடுக்கபடும்.

அப்பொழுது அப் பெண்ணானவள் வயது, குடும்ப நிலமை, பொருளாதார நிலமை போன்ற காரணங்களால்
மேலும் கருதரிப்பதினை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக பிற்போடலாம். எனவே இவ்வாறு
செய்வதன் மூலம் ஓர் சமூகத்தின் சனத்தொகையினை குறைவடையச் செய்யலாம்.

இறுதியாக அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கும் சம்பவம் ஒன்றினை இங்கு கூறுவது பொருத்தமாக
இருக்கும்.
யாழ்ப்பாணத்தின் கிராமங்களில் பெண் நாய்களை சில குடும்பத்தினர் விரும்பி வளர்ப்பர்.
ஏன்னெனில் அவை பொதுவாக சிறந்த வீட்டுகாவல் செய்யும். வீட்டினுள் யாரவது அந்நியர்
நுழைந்தால் காணும் வள்வள் என்று குரைத்தே ஊரை கூட்டிவிடும்.
ஆனால் ஒரு பிரச்னை அவைகாலம் தவறாமல் குட்டிகளை போட்டுத்தள்ளும்.

இவ்வாறே எனது நண்பன் ஒருவன் இருபெண்நாய்களை வளர்த்தான். முதன்முறை அவைகுட்டிகளை ஈன்ற
பின் குட்டிகளை அவன் பிறருக்கு கொடுக்க பெரும் அலைச்சலுக்கு உள்ளான்.

அதனை தொடர்ந்து அவன் அந்த நாய்க்கு கருத்தடை ஊசிபோட்டான். மூன்று முறைதான் போடடான்.
பிறகு ஊசிபோட இல்லை. ஆனால் அந்த நாய் குட்டிபோடவே இல்லை.

இங்கு கருத்தடை ஊசி எவ்வாறு நாய்களுக்கு பிறக்க இருந்த குட்டிகளை இல்லாமல் செய்து அதன்
இனவிருத்தி எவ்வாறு குறைக்கபட்டது என்பதை நிஜத்தில் பார்க்கலாம். இவ்வாறே முறைகேடான
கருத்தடை சாதனங்களின் பாவனை மூலம் குறிப்பிட்ட சமூகத்தின் சனத்தொகை குறைபட சாத்தியம்
உள்ளது.

தூர பிரதேசம், போக்குவரத்து வசதி இல்லை, அப்பிரதேசத்தில் உள்ள தாய்மார் கர்ப்பம் தங்கினால்
கர்ப்பிணி தாய் உயிழப்பு ஏற்பட சாத்தியம் உண்டு போன்ற வாதங்கள் முறைகேடான முறையில்
கர்ப்பத்தடை சாதனங்களை உட்செலுத்தியதை எவ்விதத்திலும் மருத்துவ உலகில் நியாயப்படுத்த
முடியாது.

*கரிகாலன்
~ மருத்துவ ஆய்வாளர்*