103 ஆவது வயதில் காலமானார் யாழ்.குப்பிழானின் பிரபல சமூக சேவையாளர்!!
யாழ்.குப்பிழானிலிருந்து புலம்பெயர்ந்து சிங்கப்பூர் நாட்டில் வாழ்ந்து வந்த மூத்த சமூக சேவையாளர் கந்தையா கிருஷ்ணன் தனது 103 ஆவது வயதில் இன்று சனிக்கிழமை(01) காலை-09 மணியளவில் சிங்கப்பூரில் காலமானார்.
கந்தையா-சின்னாச்சி தம்பதிகளின் புத்திரரான இவர் சிங்கப்பூர் நாட்டில் தபாலதிபராக கடமையாற்றி ஓய்வுபெற்றவராவார். சிங்கப்பூர் நாட்டில் வசித்து வந்தாலும் தனது பிறந்த மண்ணான குப்பிழான் மண்ணை இறுதிவரை உயிரிலும் மேலாக நேசித்த கந்தையா கிருஷ்ணன் குப்பிழான் கிராமத்தின் வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள் பற்பல.
குப்பிழானின் ஒரேயொரு பாடசாலையாக விளங்கும் குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தில் பல இலட்சம் ரூபா செலவில் பிரதான மண்டபத்தையும், பாடசாலை முன்றலில் சரஸ்வதி சிலையையும் அமைத்துக் கடந்த-17.10.2014 அன்று அன்பளிப்பாக வழங்கிய கந்தையா கிருஷ்ணர் மேற்படி பாடசாலையில் கல்வி பயிலும் வறிய மாணவ, மாணவியருக்கும் பல்வேறு வகைகளிலும் உதவியுள்ளார்.
அதுமாத்திரமன்றி வருடம் தோறும் சித்திரைப் புத்தாண்டு மற்றும் தீபாவளி தினங்களை முன்னிட்டு கிராமத்தைச் சேர்ந்த வறிய மக்களுக்கான புத்தாடைகள் மற்றும் உலர் உணவுப் பொதிகளைத் தொடர்ச்சியாக வழங்கி வந்துள்ள அன்னார் கந்தையா கிருஷ்ணன் கிராமத்தைச் சேர்ந்த முன்னணி விளையாட்டுக் கழகங்களான குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகம், விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகம் மற்றும் விவசாய சம்மேளனம் ஆகியவற்றிற்கும் நிதியுதவிகள் வழங்கியுள்ளார். அத்துடன் கிராமத்திற்குச் சேவையாற்றிய மூத்தோர்களை கெளரவிக்க வேண்டுமென்பதிலும் ஆர்வம் கொண்டு அதனை நிறைவேற்றியும் காட்டினார்.
சிவத்தமிழ் வித்தகரின் நினைவுப் பேருரையும் தையல்பயிற்சி பெற்றவர்களுக்கான தையல் இயந்திரம் வழங்கும் வைபவமும் அண்மையில் குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரம மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் குப்பிழானில் தையல் பயிற்சி பெற்ற மாணவிகள் குழுவாக இணைந்து தொழிலை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் மூன்று தையல் இயந்திரங்களை கந்தையா கிருஷ்ணரே அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.
குப்பிழான் வடக்கு கிராம முன்னேற்ற சங்கத் தலைவரும், அன்னாரது நெருங்கிய உறவினருமான் தி. சசீதரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்கள் அனைவரும் கந்தையா கிருஷ்ணரின் பல்வேறு பட்ட சமூகப் பணிகளை மெச்சிப் பேசியிருந்தனர்.
103 வயதிலும் தனது நாளாந்தக் கடமைகளை தானே செய்து வந்த கந்தையா கிருஷ்ணன் இறுதிநேரத்தில் கூட நோய்வாய்ப்பட்டிருக்கவில்லை.
இதேவேளை, அன்னாரது இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் திங்கட்கிழமை(03) சிங்கப்பூரில் இடம்பெறுமென குப்பிழானைச் சேர்ந்த அவரது உறவினரொருவர் சற்றுமுன் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வசித்து வந்தாலும் பிறந்த மண்ணையே இறுதிவரை நேசித்து, சுவாசித்து வாழ்ந்த கந்தையா கிருஷ்ணன் தனியொரு மனிதனாக குப்பிழான் கிராமத்தின் முன்னேற்றத்திற்கு ஆற்றிய பணிகள் குப்பிழான் கிராம வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது.