புதினங்களின் சங்கமம்

நாங்கள் ஐ. எஸ். தீவிரவாதிகள், யாழில் வயோதிபத் தம்பதியர்களை மிரட்டி கொள்ளை முயற்சி (Video)

யாழ்.குப்பிழான் வடக்கு கற்கரைக் கற்பக விநாயகர் கோயிலுக்கு அருகாமையில் வயோதிபத் தம்பதியர் தனித்திருந்த வீடொன்றின் யன்னல் கம்பிகளை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் வீடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடியுள்ளனர். குறித்த வீட்டில் பெறுமதியான நகைகள் எதுவும் கிடைக்காமையால் 45 ரூபா பணத்தை மட்டும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். எனினும், வீட்டிலிருந்தவர்களை தாங்கள் ஐ. எஸ். தீவிரவாதிகளெனவும், குண்டு வைப்போம் எனவும் கடுமையாக மிரட்டியுள்ளான்.குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை(31-05-2019)அதிகாலை இடம்பெற்றுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த வீட்டில் வசித்து வந்த வயோதிபத் தம்பதியரில் வயோதிபப் பெண் வீட்டில் ஏதோ சந்தேகத்துக்கிடமான நடமாட்டம் காணப்படுவதை உணர்ந்து அதிகாலை-01.15 மணியளவில் அறையிலிருந்து வெளியே வந்து பார்த்துள்ளார். அங்கு இரண்டு பேர் நிற்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்த அவர் “ஐயோ கள்ளரடா….” என்று உரத்த தொனியில் அவலக் குரலெழுப்பியுள்ளார்.

தனது மனைவியின் அவலக் குரல் கேட்டு வயோதிபரான கணவரும் கத்தியவாறு அறையிலிருந்து வெளியே வந்துள்ளார்.அப்போது அங்கு நின்றவர்களில் ஒருவன் “நாங்கள் ஐ. எஸ் தீவிரவாதிகளெனவும், சத்தம் போட்டால் குண்டு வைப்போம் எனவும் கடுமையாக மிரட்டியுள்ளான்.அதன் பின்னரும் அவர் உரத்து அவலக் குரல் எழுப்பவே ‘சத்தம்’ போடாதே என மிரட்டியவாறே முன்கதவுக்குப் பாதுகாப்புக்குப் போடும் ரீப்பையால் எடுத்து குறித்த வயோதிபரைக் கொள்ளையர்களில் ஒருவன் பலமாகத் தாக்கியுள்ளான்.

இதன் பின்னரும் குறித்த வயோதிபர் உரத்துக் கத்தவே மற்றைய கொள்ளையன் கையால் குறித்த வயோதிபரைத் தாக்கியுள்ளான்.

இந்நிலையில் வயோதிபர் அவலக் குரலெழுப்பிக் களைப்படைந்த நிலையில் செய்வதறியாது நின்றுள்ளார். இந்நிலையில் அவரை அப்படியே கீழே இருக்குமாறு கொள்ளையர்களில் ஒருவன் கூறியுள்ளான். அவரும் அப்படியே அமர்ந்த நிலையில் தொடர்ந்தும் உரத்துக் கத்தவே கொள்ளையர்கள் அங்கிருந்து பேர்ஸிலிருந்து 45 ரூபாவை எடுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.

அதன்பின்னரே குறித்த கொள்ளையர்கள் வீட்டின் சுவாமி அறை யன்னல் கம்பிகளை உடைத்து வீட்டினுள்ளே உட்புகுந்தமை தெரியவந்தது. அத்துடன் சுவாமியறையிலிருந்த அலுமாரிக் கதவையும் உடைத்து சல்லடை போட்டுத் தேடியமையும், வீட்டின் பின்புறமாகவுள்ள காணியின் முள்ளுக் கம்பியை வெட்டியும் உள்ளே வந்தமை தெரியவந்தது. கொள்ளையர்கள் இருவரும் கறுப்புத் துணியால் தங்கள் முகங்களை மறைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மேற்படி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வயோதிபத் தம்பதியர் பிரித்தானியா நாட்டின் குடியுரிமை பெற்றவர்களாவார்.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர்கள் தமது சொந்த மண்ணிற்கு வருகை தந்து வசித்து வருகின்றனர்.

இதேவேளை, நீண்டநாட்களுக்குப் பின்னர் குப்பிழான் வடக்கில் இடம்பெற்ற மேற்படி கொள்ளை முயற்சி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.