காலிமுகத்திடலுக்குள் இராணுவம் புகுந்து போராட்டக்காரர்கள் மீது கடும் தாக்குதல்!! மீண்டும் ராஜபக்ச பாணியில் ரணில் நடவடிக்கை!!
கொழும்பு காலிமுகத்திடலில் இன்று அதிகாலை 1மணி தொடக்கம் பல நூற்றுக்கணக்கான ஆயுதம் தரித்த இராணுவத்தினரும் பொலிஸ் படைப்பிரிவினரும் களமிறக்கப்பட்டு போராட்டக்காரர்களை அகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகின்றது என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் போது,
போராட்டக்காரர்களின் நூலகம் உட்பட்ட கூடாரங்கள் படைத்தரப்பினரால் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை, பிபிசியின் ஊடகவியலாளர் ஒருவர் உட்பட்ட ஊடகவியலாளர்கள் மீதும் படைத்தரப்பினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டு அங்கிருந்து வெளியேற்றும் முயற்சி தீவிரமாக நடைபெறுவதாக தெரியவருகிறது.
பலநூற்றுக்கணக்கில் படைத்தரப்பினர் குவிக்கப்பட்டு போராட்டக்களம் சுற்றிவளைக்கப்பட்டு அங்கு வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் பதற்ற நிலை தொடர்ந்தும் நீடிப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமாணம் மேற்கொண்டதுடன், ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை உட்பட்ட அலுவலகங்களை கைப்பற்றியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

