இனிவரும் நாட்களில் மக்களுக்கே எரிபொருள்; கச்சேரியின் பட்டியல் தொடர்பில் யாழ். மாவட்ட SLRC விசனம்!
யாழ்.மாவட்டச் செயலத்திற்கு அண்மையில் உள்ள லங்கா IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக எரிபொருள் வழங்குவதில் இதுவரைகாலமும் எந்தவிதமான பிரச்சினையும் இடம்பெற்றதில்லை. ஆனால் சில நாட்களுக்கு முன்னர் யாழ்.மாவட்டச் செயலகத்தின் ஊடாக அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் எனத் தெரிவிக்கப்பட்டு ஆயிரத்துக்கும் அதிகமானவர்களின் பெயர்ப் பட்டியல் கையளிக்கப்பட்டு அதனை பகிர்ந்தளிக்க முற்பட்டபோதே பிரச்சினைகள் ஏற்பட்டதாக யாழ் மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் கு. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட இலங்கைச் செஞ்சிலுவைச்சங்கத்தின் வருவாயை நோக்கியே குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஊடாக கிடைக்கின்ற வருமானம் நிவாரணம், மருத்துவம் உட்பட்ட மக்களுக்கான சேவைகளுக்காகவே பயன்படுத்தப்படுகின்றது.
பாதுகாப்புத் தரப்பினதும் கச்சேரியினதும் செயற்பாடுகளால் மக்களுக்கு பகிர்ந்தளிக்க முடியவில்லை. உண்மையில் செஞ்சிலுவைச் சங்கம் என்ற அடிப்படையில் மக்களுக்குச் சேவை செய்வதே எங்கள் நோக்கமாகும். அதனையே நாங்கள் தொடர்ந்தும் செய்வோம். எதிர்காலத்திலும் அவ்வாறு தான் செயற்படுவோம்.
ஏனெனில் ஐந்து நாட்கள் காத்திருக்கின்ற மக்களை விட்டுவிட்டு உடனடியாக வந்து கேட்பவர்களுக்கு பெருந்தொகையாகக் கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. அடுத்த முறை பெற்றோல் வருமாக இருந்தால் நாங்கள் நிச்சயமாக பொதுமக்களுக்குத் தான் வழங்க முடிவு செய்திருக்கின்றோம். இந்த முடிவை நிர்வாகக்குழு எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.ஓ.சீ பணிப்பாளர் எழுபது வீதமான எரிபொருளை மக்களுக்கு வழங்குமாறு பணித்துள்ளதால் தாமும் அவரின் பணிப்பையே கைக்கொள்ளவுள்ளதாகவம் யாழ் மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் கு. பாலகிருஷ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.

