புதினங்களின் சங்கமம்

ஞானசாரதேரர் விடுதலையில் சைவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாம்!!

நோக்கத்தில் தூய்மையாகச் செயற்பட்ட ஞானசாரதேரர் சினந்து சொன்ன சொற்கள் இலங்கையின் சட்டங்களுக்குப் புறம்பானதென நீதிமன்றம் கண்டறிந்தமையால் அவர் சில காலம் சிறைலிருக்க வேண்டியேற்பட்டது. அவர் வெளியே வந்திருக்கிறார். மீண்டும் தன் பணியைத் தொடர்கிறார் என்பதில் சைவர்களாகிய நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கைக்கு அண்மையில் வந்த சமயங்களான கிறிஸ்தவம், முகமதியம் ஆகிய இரண்டும் இலங்கையின் நெடுங்கால பாரம்பரியத்தைப் பேணுகின்ற சமயங்களான புத்தத்தையும், சைவத்தையும் தாக்கி மதமாற்றும் நோக்கம் கொண்டிருப்பன. வந்த சமயங்களான கிறிஸ்தவம், முகமதியம் ஆகிய இரண்டிலிருந்தும் புத்த தேசியத்தைக் காக்க வேண்டுமென்ற முனைப்புடன் செயற்பட்டவர் ஞானசாரதேரர்.

தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாக ஞானசாரதேரரை மன்னித்து விடுவித்த இலங்கை அரசிற்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பொதுபலசேனாவும் அதன் தலைவர் ஞானசார தேரரும், அவருடன் இணைந்து பணியாற்றுகின்ற இலட்சக்கணக்கான தொண்டர்களும் இந்த மண்ணின் மரபைக் காப்பதற்கு முயற்சி செய்கின்ற மாபெரும் தொண்டர்கள். சைவசமயத்தை வந்தேறிச் சமயங்கள் அழிப்பதிலிருந்து காக்கப் பொதுபலசேனா துணை நிற்குமென நம்புகிறோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.