‘2015 தேர்தலில் எனக்கு எதிராக செயற்பட்ட சஹ்ரான்‘ – மகிந்த கூறுகின்றார்!!
தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் என்பவர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் எனக்கு எதிராக செயற்பட்டதுடன் தற்போதைய ஜனாதிபதிக்காக பாரிய பணியாற்றியவர் என்று எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சிங்கள வார இறுதி பத்திரிகையான லங்காதீபவுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன் விபரம் வருமாறு,
கேள்வி: நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் திருப்தியடைய முடியுமா?
பதில்: கடந்த தினங்களில் நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் யாராலும் நினைத்துப் பார்க்க முடியாதவை. பாதுகாப்பு பலவீனங்கள் தென்பட்டன.
கேள்வி: புலனாய்வு உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டமையே பாதுகாப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்பதை அரசாங்கம் மறுக்கிறதே…?
பதில்: அவர்கள் எதனையும் ஏற்றுக்கொள்ளவில்லையே. புலனாய்வு அதிகாரிகள் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்தனர். சிலர் கைதுசெய்யப்பட்டு பிணையில் உள்ளனர். மேலும் சிலர் சிறைகளில் உள்ளனர். தற்போது நாடு ஸ்திரமற்ற நிலையில் இருக்கிறது. மக்களின் மனதில் உள்ளவற்றைக் கேட்க வேண்டும்.
கேள்வி: பொலிஸ் மா அதிபரும் இராணுவத் தளபதியும் பாதுகாப்பு சிறப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளனரே?
பதில்: 90 வீதம் 80 வீதம் நன்றாக உள்ளது என்று கூறிப் பலனில்லை. பாதுகாப்பு 100 வீதம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
கேள்வி: அப்படியானால் மாணவர்களை ஏன் பாடசாலைக்கு வருமாறு அழைத்தீர்கள்?
பதில்: இந்த நிலைமையை நீடிக்க இடமளிக்க முடியாது. பாதுகாப்புத்துறை சார்ந்தவர்களும் பிரதமரும் நாடு பாதுகாப்புடன் இருப்பதாக கூறினால் குறிப்பிடத்தக்க அளவில் ஏற்க வேண்டும். அத்துடன் தொடர்ந்தும் பாடசாலைகளை மூடிக்கொண்டிருக்க முடியாது. அதனால்தான் நாம் பொறுப்புடன் செயற்பட்டு இந்த அழைப்பை விடுத்தோம்.
கேள்வி: இது சர்வதேச பயங்கரவாதம் என பிரதமர் தெரிவித்துள்ளாரே…?
பதில்: இது சர்வதேச மற்றும் உள்ளக பயங்கரவாதம். இந்தப் பயங்கரவாத நடவடிக்கையில் வெளிநாட்டவர்கள் ஈடுபடவில்லை. உள்நாட்டில் இருந்தவர்களே இதனைச் செய்துள்ளனர்.
கேள்வி: தற்கொலை குண்டுதாரிகளைக் கொண்ட அமைப்பு உங்கள் ஆட்சிக் காலத்தில் உருவாகியதா?
பதில்: எமது காலத்தில் குறிப்பிட்டளவில் உருவாகிக்கொண்டு வந்தது. அப்போது நாங்கள் அவர்கள் குறித்து தேட ஆரம்பித்தோம். அவ்வாறு அவர்களின் குழுக்களுக்குள் எமது குழுக்களை அனுப்பி சில திட்டங்களை ஆரம்பித்தோம்.
கேள்வி: அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளதா?
பதில்: புலனாய்வாளர்கள் ஒரு சேவையை வழங்குகின்றனர். அதனால் அவர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். இல்லாவிடின் எந்தத் தகவலும் கிடைக்காது.
கேள்வி: ஆனால் மஹிந்த ராஜபக்ஷ தனது நன்மைக்காக சில குழுக்களை வைத்திருந்ததாக சிலர் கூறுகின்றனரே?
பதில்: அப்படி இல்லாவிடின் எவ்வாறு உளவுத் தகவல்களை பெறுவது. அதற்கு நாம் எமது ஆட்களை அங்கு அனுப்ப வேண்டும். இந்தியா இது தொடர்பில் எமக்கு தகவல் வழங்கியது. அவர்கள் எவ்வாறு இந்த தகவல்களை வழங்கினார்கள். சாத்திரம் பார்த்து வழங்கவில்லை. அவர்களின் உளவுப் பிரிவு ஊடாக கிடைத்த தகவல்களை வழங்கினார்கள். எமது காலத்தில் இந்த அமைப்புக்கள் என்ன செய்தது என்பதை பார்த்துக் கொண்டிருந்தோம்.
கேள்வி: மஹிந்தவின் காலத்தில் சிறுபான்மையினர் நெருக்கடிக்கு உட்பட்டனர். அதன் விளைவாகவே இந்தக் குழுக்கள் உருவாகின. இதனை ஏற்கிறீர்களா?
பதில்: அப்படி எந்த நெருக்கடிகளும் இருக்கவில்லை. அனைத்து மக்களும் சுதந்திரமாக இருந்தனர். இருந்த அழுத்தத்தை நாமே நீக்கினோம்.
கேள்வி: அளுத்கம–தர்காநகர் சம்பவங்கள்…-?
பதில்: அவை அரசியல் சம்பவங்கள். அரசியல் ரீதியாக அவை நடத்தப்பட்டன. அதனை என் மீது சுமத்தி சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெற முயற்சித்தனர். இந்த சஹ்ரான் என்பவர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் எனக்கு எதிராக செயற்பட்டு தற்போதைய ஜனாதிபதிக்காக பாரிய பணியாற்றியவர். எனவே பேருவளை–தர்காநகர் சம்பவங்களை செய்தவர் யார் என அனைவருக்கும் தெரியும்.
கேள்வி: யார் அவர்கள்?
பதில்: அது தேவையில்லை. எவ்வாறு யார் திட்டமிட்டார்கள் என அனைவருக்கும் தெரியும்.
கேள்வி: அமைச்சர் ரிஷாத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து பாவங்களையும் அவர் மீது சுமத்த முயற்சிக்கிறீர்களா?
பதில்: அந்தப் பயம் எனக்கும் இருக்கிறது. அரசாங்கத்தின் அனைத்துப் பாவங்களையும் ரிஷாத் மீது சுமத்தி தப்பிவிடுவார்கள் என சிந்திக்கிறேன். ஆனால் அவ்வாறு முடியாது. ரிஷாத் இந்த அரசாங்கத்தின் ஒரு பங்குதாரர். அவர் மீதான குற்றச்சாட்டுக்களை பார்க்கும்போது அவை நியாயமானவை என்றே தெரிகிறது. ஆனால் அவரை விசாரிக்கவுமில்லை. கைது செய்யவுமில்லை. வீட்டுச் சிறை வைத்தாவது அவரை விசாரிக்க வேண்டும் அல்லவா? அவர் சந்தேக நபர்கள் விடயத்தில் இராணுவத் தளபதிக்கு தொலைபேசியில் பேசியிருக்கிறார். அதனை நாங்கள் கூறவில்லை. இராணுவ தளபதியே கூறியுள்ளார்.
கேள்வி: அரசுக்கு எதிராக ஜே.வி.பி. நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பித்துள்ளதே?
பதில்: அவர்கள் தொடர்ந்து அரசாங்கத்துடனேயே இருந்தனர்.
கேள்வி: நீங்கள் முன்வைத்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சுதந்திரக் கட்சியின் மைத்திரி தரப்பு என்ன செய்யும்…..?
பதில்: அவர்கள் எம்முடன் இணைந்து வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.
கேள்வி: ஆனால் ஜனாதிபதி அரசின் தலைவர்…..?
பதில்: எனினும் அவர் நேரடியான ஒரு முடிவை எடுப்பார் என நம்புகிறோம்.
கேள்வி: நேரடியான முடிவு என்றால்…?
பதில்: ஆதரவாக வாக்களிப்பார் அல்லது நடுநிலைமை வகிப்பார்.
கேள்வி: பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அவசியமில்லை என்று அமைச்சர் சஜித் கூறியிருக்கிறார் அல்லவா….?
பதில்: ஆம், நானும் அதனைக் கண்டேன்.
கேள்வி: அப்படியாயின் உங்கள் போராட்டத்தை சஜித் கையில் எடுத்துள்ளாரா…?
பதில்: எமது போராட்டத்துக்கு ஆளும் தரப்பில் ஆதரவு கிடைப்பது நல்லது. எனினும் அவர் இதனை சமர்ப்பிக்க ஆதரவு வழங்கினார். எனினும் அது தவறானது என தற்போது அவர் புரிந்துகொண்டுள்ளமை நல்லது. ஆனால் இவர் அமைச்சரவையில் உடன்படுகிறார். வெ ளியில் எதிர்க்கிறார்.
கேள்வி: சர்வதேச பயங்கரவாதத்தை தோற்கடிக்க இந்தச் சட்டம் தேவை என பிரதமர் கூறியுள்ளாரே…?
பதில்: அவ்வாறு தேவையில்லை. அப்படி தேவையாயின் தற்போதைய சட்டத்தில் திருத்தம் செய்யலாம்.
கேள்வி: திருத்தம் கொண்டுவந்தால் ஆதரவு வழங்குவீர்களா….-?
பதில்: நிச்சயமாக ஆதரவு வழங்குவோம்.
கேள்வி: இந்தப் பிரச்சினைக்கு மத்தியில் தேர்தல்கள் பிற்போடப்படுமா….?
பதில்: மாகாண சபைத் தேர்தல் ஏற்கனவே தாமதமாகிவிட்டது. இந்த அரசாங்கம் தேர்தல்களுக்கு பயந்துவிட்டது. ஆனால் தேர்தல்களை தாமதிக்க முடியாது.
கேள்வி: அப்படியானால் ஜனாதிபதி தேர்தல்….-?
பதில்: ஜனாதிபதி தேர்தல் இந்த வருடம் நடைபெற வேண்டும். அதனை தாமதிக்க முடியாது.
கேள்வி: நாட்டின் நிலைமையைக் கருத்திற்கொண்டு….-?
பதில்: ஜனாதிபதி தேர்தலை தாமதிப்பார் என நான் எண்ணவில்லை. அவர் ஒரு தரம் பதவி வகிப்பதாகவே கூறியிருந்தார்.
கேள்வி: மொட்டின் ஜனாதிபதி வேட்பாளர் யார்?
பதில்: அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எமது வேட்பாளர் யாராயினும் வெற்றி பெறுவார்.
கேள்வி: கோத்தபாயவின் பெயரை ஏன் கூறாமல் தவிர்க்கிறீர்கள்?
பதில்: யார் வேட்பாளர் என்பதை கட்சி இன்னமும் தீர்மானிக்கவில்லை.
நன்றி: லங்காதீப