கொரானா தடுபு்பூசி உடல் உறவு, இனப்பெருக்கத்தைப் பாதிக்குமா? யாழ் மகப்பேற்று நிபுணர் சிறிதரன்

கர்ப்பிணி தாய்மார் சினோஃபார்ம் உள்ளிட்ட தடுப்பூசிகளை செலுத்துவதில் ஆபத்தில்லையென
தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று, பெண்ணியல் வைத்திய
நிபுணர் வைத்தியர் அ.சிறிதரன்.

இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சாதாரண ஒருவரில் தடுப்பூசி எப்படி தொழிற்படுகிறதோ, செயற்பாட்டு திறன்
எப்படியிருக்கிறதோ அப்படியே கர்ப்பிணி பெண்களிற்கும் இருக்கும். மற்றவர்களிற்கு எப்படியான
பாதுகாப்பு கிடைக்குமோ அப்படியான பாதுகாப்பு கர்ப்பிணிகளிற்கும் கிடைக்கும்.

தற்போதைய நிலையில், 35 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணிகளிற்கு, நாட்பட்ட நோய்களால்
பாதிக்கப்பட்டவர்கள், நோயாளிகளுடன் சம்பந்தப்பட்ட கர்ப்பிணிகளிற்கு தடுப்பூசி வழங்க
தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணிகளிற்கு முதல் 3 மாதங்களில் போலிக் அசிட் தவிர்ந்த எந்த மருந்தும்
செலுத்தப்படுவதில்லை. 12- 14 வார கர்ப்பம் முடிந்த கர்ப்பிணிகள் எந்த தயக்கமுமின்றி
தடுப்பூசியை செலுத்தலாம்.

மற்றவர்களுடன் சேராமல், கர்ப்பிணிகளை மட்டும் அழைத்து தடுப்பூசி வழங்கும் திட்டம்
தயாரிக்கப்பட்டுள்ளது.

பாலூட்டும் தாய்மாரும் தடுப்பூசியை செலுத்தலாம். தடுப்பூசி செலுத்திய அன்றே குழந்தைக்கு
பாலூட்டலாம்.

திருமணம் செய்யவிருப்பவர்களும் தடுப்பூசியை செலுத்தலாம். இதுவரையான தகவல்களின்படி
எந்தவொரு தடுப்பூசியும் ஆண்களின் விதையையோ, பெண்களின் சூலகங்களையோ தாக்குவதில்லை,
அவர்களிற்கு மலட்டு தன்மை ஏற்படுவதில்லை, அவர்களின் தொழிற்பாட்டில் எந்த மாற்றமும்
ஏற்படுவதில்லையென்பது தெரிய வந்துள்ளது.

முன்னர் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், 3-6 மாதங்களிற்குள் கர்ப்பம் தரிக்க
விரும்புபவர்கள் தடுப்பூசியை செலுத்த வேண்டாமென 2 மாதங்களின் முன்னர் யாழ் போதனா
வைத்தியசாலையில் ஒரு அறிவித்தல் வைக்கப்பட்டிருந்தது. அப்போதைய ஆய்வு தரவுகளின்படி
அல்லது போதுமான தகவல்கள் கிடைக்காததன் அடிப்படையில், குழந்தைகளின் அங்கம் உருவாகும்
காலத்தில் தடுப்பூசியை செலுத்தாமல் விடலாம் என்ற அறிவித்தல் வழங்கப்பட்டது. தற்போதைய
தரவுகளின் அடிப்படையில், தடுப்பூசிகளை பெறலாம் என கூறப்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)