FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்

நாங்கள் அந்தக்காலத்திலிருந்தே காட்டிக் கொடுத்துள்ளோம்!! யாழ் முஸ்லீம்கள் கூறுகின்றனர்!!

இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் கிளர்ச்சி செய்ய வேண்டிய தேவைகள் இல்லை. ஏனெனில் எமது
இனத்தின் உரிமைகளை பெற்றுக் கொடுக்க எம்மிடம் பலமான அரசியல் தலைமைகள் உள்ளனர் என
ஜம்இய்யித்துல உலமா சபையின் யாழ், கிளிநொச்சி மாவட்ட கிளையின் தலைவர் எஸ்.சுபியான்
தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பள்ளிவாசலில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை
தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களாகிய நாம் பூரண சுதந்திரத்துடன் வாழ்ந்து வருகின்றோம்.
எமக்கு தேவையான விடயங்களை நாம் இலங்கை அரசிடம் கேட்டுப் பெற்றுக் கொள்கின்றோம். அதிலும்
எமது உரிமைகள் சார்ந்த விடயத்தில் குரல் கொடுக்க எம்மிடம் சரியான முஸ்லிம் அரசியல்
தலைமைகள் உள்ளனர். அவர்கள் கடந்த காலங்களில் எமக்காக பல விடயங்களை அரசுடன் பேசி பெற்றுத்
தந்துள்ளனர்.

தற்போது முஸ்லிம் இனத்தின் பெயரால் நாட்டில் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த
தாக்குதல்களுக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லை. இதனை
அரசும்,பாதுகாப்பு தரப்பினரும் பல தடவைகள் இதனை கூறியுள்ளனர். நாம் ஆரம்ப காலத்தில்
இருந்து பயங்கரவாதத்துக்கு எதிரானவர்கள். இந்த நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு
சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை பாதுகாப்பு தரப்பினருக்கு முஸ்லிம் சமூகத்தினர் காட்டிக்
கொடுத்துள்ளனர். பிடித்தும் கொடுத்துள்ளனர். இதனை அனைவரும் அறிவார்கள்.

நாம் வன்முறையாளர்களை எந்த சந்தர்ப்பத்திலும் பாதுகாப்பு தரப்பினருக்கு காட்டிக்
கொடுப்போம். யாழ்ப்பாண மாவட்டத்தினை பொறுத்தவரையில் இங்குள்ள பாதுகாப்பு தரப்பினருடன்
கலந்துரையாடியுள்ளோம். எமது பிரதேசங்களில் யாராவது ஓர் பயங்கரவாதி இருந்தாலும் நாம்
உடனடியாக காட்டிக் கொடுப்போம் என உறுதிமொழி கொடுத்துள்ளோம்.

நாட்டில் குண்டுத் தாக்குதல்கள் நடத்திய அமைப்பினர் 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே
இலங்கைக்குள் உள்ளனர் என கூறியுள்ளோம். இந்த விடயம் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய
ராஜபக்சவுக்கும் தெரியும். எனவே இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களை திட்டமிட்ட வகையில்
பொய்யான பிரசாரங்களை கூறி வதைத்து வருகின்றனர். அவற்றை அவர்கள் நிறுத்த வேண்டும் என்றார்.