இந்தியச் செய்திகள்

வீட்டில் ஒன்பது பேர்…! கிடைத்த வாக்குகளோ வெறும் ஐந்துதான்!! கண்ணீர்சிந்திக் கதறியழுத வேட்பாளர்!!!

இந்திய மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெறும் ஐந்து வாக்குகளை மட்டுமே பெற்றதென்று நினைத்து கமரா முன்னால் அழுது கண்ணீர்விட்ட ஒரு வேட்பாளர் தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது.

வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த வாலா எனப்படும் ஒரு சுயேட்சை வேட்பாளரே இவ்வாறு தான் ஐந்து வாக்குகளை எடுத்துள்ளதாக நினைத்துள்ளார்.

இதுகுறித்து வாலாவிடம் உள்ளூர் தினசரி ஊடகம் ஒன்று பேட்டிகண்டது. இதன்போது அவர் கதறியழுதுள்ளார்.

தனது வீட்டில் மொத்தம் ஒன்பதுபேர் வாக்களிப்புத் தகுதியுடன் இருந்தபோதும் தனக்கு வெறும் ஐந்து வாக்குகளே கிடைத்ததாக அவர் கமரா முன்பு விம்மி விம்மி அழுதுள்ளார்.

மேலும் தனது குடும்பத்தினரே தன்னைக் கைவிட்டதாக அவர் தனது ஆதங்கத்தினை கொட்டித்தீர்த்தார்.

ஆனால் நேரம் செல்லச் செல்ல அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மொத்தம் 856 வாக்குகளை அவர் பெற்றிருந்தமை தெரியவந்தது.

எவ்வாறாயினும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி இடம்பெற்றுவிட்டதாக அவர் கூறினார். இவர் அழுத காணொளி தற்போது வைரலாகிவருவதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.