இந்தியச் செய்திகள்புதினங்களின் சங்கமம்

சிறுமியை காதல் வலையில் வீழ்த்தியவருக்கு அரிவாள் வெட்டு!

திருச்சியில் 10ஆம் வகுப்பு மாணவியை ஏமாற்றி காதல் வலையில் சிக்கவைத்த, திருமணமான இளைஞரை, அந்த சிறுமியின் அண்ணன்கள் ஓட ஓட விரட்டி அரிவாள் மற்றும் இரும்புக் கம்பியால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

திருச்சி திம்மராய சமுத்திரத்தைச் சேர்ந்தவர் கொத்தனார் வேலை பார்க்கும் மணிகண்டன்.30 வயதாகும் மணிகண்டனுக்கு திருமணமாகி, மனைவி அவரைப் பிரிந்து வேறொருவருடன் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் மணிகண்டன் அதே பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை காதல் வலையில் வீழ்த்த முயற்சித்ததாகச் சொல்லப்படுகிறது.

இதனை சிறுமியின் அண்ணன்களான சிவா, சுரேஷ், சந்தோஷ் மூவரும் கண்டித்துள்ளனர். அதனைக் கண்டுகொள்ளாத மணிகண்டன், தொடர்ந்து சிறுமியை தனியே சந்தித்து உரையாடுவதை வழக்கமாக்கி கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் புதன்கிழமை மாலை அகிலாண்டேஸ்வரி கோவில் அருகே மணிகண்டனை சிறுமியுடன் அவரது அண்ணன்கள் பார்த்துள்ளனர். ஆத்திரமடைந்த அவர்கள் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு அரிவாள் மற்றும் இரும்புக்கம்பி போன்ற ஆயுதங்களுடன் மணிகண்டனை துரத்தியுள்ளனர்.

உயிருக்கு பயந்து ஓடி அங்குள்ள அடகுக் கடை ஒன்றுக்குள் நுழைந்த மணிகண்டனை வெளியே இழுத்து அக்கும்பல் சரமாரியாகத் தாக்கியது. இந்தக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

தகவலறிந்து வந்த போலீசார், மணிகண்டனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தப்பியோடிய நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.