புதினங்களின் சங்கமம்

ஆவா குழு காவாலிகள் திருந்திட்டார்களாம்!! கூறுவது யார்?

“யாழ்ப்பணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஆவா குழுவைச் சேர்ந்த இளைஞர்கள்
தற்போது திருந்தி சமூகத்தில் நல்லவர்களாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களைக் கட்டுப்படுத்திய
பெருமையுடன் வடக்கில் இருந்து மாற்றலாகின்றேன்”

இவ்வாறு வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் ரொசாந்த் பெர்ணான்டோ தெரிவித்தார்.

அழைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் சிலரை அவர் இன்று தனது அலுவலகத்தில் சந்தித்த போதே இந்தக்
கருத்தை வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் உள்பட வடக்கு மாகாணத்தில் வாள்வெட்டு, மணல் கடத்தல், போதைப்பொருள் கடத்தல்
உள்ளிட்ட வன்முறைகளைக் கட்டுப்படுத்திய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களை பழிவாங்கும் வகையில்
அவர்களை வடக்கு மாகாணத்துக்குள் இடமாற்றம் வழங்கி உளவியல் ரீதியாக அவர்களை பாதிப்படைய
செய்தவர் வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் ரொசாந்த் பெர்ணான்டோ.

அத்துடன், ஹோட்டல் உரிமையாளர் தொடக்கம் மாட்டிறைச்சிக் கடை உரிமையாளர் வரை தொடர்புகளைப்
பேணி, அவர்களுக்கு பல வழிகளில் துணை நின்றவர். அதனாலேயே பல தமிழ் பொலிஸ்
உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வந்த ரொசாந்த்
பெர்ணான்டோ, தென் மாகாணத்துக்கு இடமாற்றம் பெற்று செல்லவுள்ளார்.

“வடக்கு மாகாணம் போருக்கு பின்னர் அமைதியாக இருந்தது. பின்னர் சில இளைஞர்கள்
குழுக்களாக இணைந்து வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். அவ்வாறான இளைஞர்
குழுக்களுக்கு ஒவ்வொரு பெயர்களும் இருந்தன. இதனால் வடக்கில் அதிலும் குறிப்பாக
யாழ்ப்பணத்தில் வாள்வெட்டு சம்பவங்கள் அரங்கேறின.

இந்த குற்றச்செயல்களை கட்டுப்படுத்த பல பொலிஸ் குழுக்கள் நியமிகப்பட்டன. வன்முறையில்
ஈடுபட்டவர்கள், அவர்களுக்கு உதவிய நபர்களை கைது செய்தோம்.

எனினும் அவர்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்க யாரும் வருவதில்லை. அதனால் வன்முறையில்
ஈடுபடுவோர் வெளியில் வந்து விடுகின்றனர். அவ்வாறு வருபவர்கள் தாம் இனிமேல் இவ்வாறான
வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபடமாட்டோம் என உறுதியளித்துள்ளனர். அத்துடன் அவர்கள் திருந்தி
வாழ்ந்தும் வருகின்றனர்.

தற்போதும் ஒரு சில சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. ஆனால் தொட்டதுக்கு எல்லாம் அவர்களை
நாம் கைது செய்யமுடியாத நிலை உள்ளது. ஏனெனில், உரிய ஆதாரம், சாட்சியத்துடன் நாம்
கைது செய்ய வேண்டிய தேவைகள் இருக்கின்றன. வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்காக நாம் குற்றச்
செயல்களில் ஈடுபடாதவர்களை கைது செய்ய முடியாது.

எது எவ்வாறாயினும், யாழ்ப்பணத்தில் அரங்கேறிய வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது
செய்தமை, குற்றங்களை கட்டுப்படுத்தியமை அதற்கும் அப்பால் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது
திருந்தி வாழ்கின்றனர். அவ்வாறு வாழ்பவர்களின் பெற்றோர்கள் எமக்கு தொடர்பை ஏற்படுத்தி
மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். இந்த மன நிறைவுடன் வடக்கை விட்டு மாற்றல் பெற்றுச்
செல்கின்றேன்” என்று வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் ரொசாந்த் பெர்ணான்டோ
மேலும் தெரிவித்தார்.