புதினங்களின் சங்கமம்

யாழ் புங்குடுதீவு யுவதிக்கு கொரோனா தொற்று உறுதி!! யாழில் ஊரடங்கு அபாயம்!!

யாழ்ப்பாணம் தீவகம் புங்குடுதீவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண்களில் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றைய பெண்ணுக்கு கொரோனா இல்லை என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கம்பஹா ஆடைத்தொழிற்சாலையிலிருந்து ஊர் திரும்பியிருந்த நிலையில் இரண்டு பெண்களும் குடும்பத்தாரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அவர்களில் மூன்று பேருடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண்ணுக்கே கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏனையவர்கள் எவருக்கும் தொற்றில்லை என்று வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கம்பஹா மினுவாங்கொட பகுதியில் ஆடைத் தொழிற்சாலை பெண்ணுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று இலங்கையில் கொரோனா 2வது அலையை தோற்றுவிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் வட மாகாண மக்களுக்கு முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடமாகாணத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.

கம்பஹா மாவட்டத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் வடமாகாணத்தில் கொரோனா தொற்று பரம்பலை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைபிடிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம.

1. பொது மக்கள் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை இறுக்கமாகப் பின்பற்ற வேண்டும்.

2. பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும்.

3. பொது இடங்களில் இருவருக்கு இடையில் ஆகக்குறைந்தது 1மீட்டர் சமூக இடைவெளி பேணப்படவேண்டும்.

4. அலுவலகங்கள், வர்த்தக நிலையங்கள், பொது இடங்களில் சவர்க்காரமிட்டு கை கழுவிய பின்பே உள்ளே செல்ல வேண்டும், அத்துடன் வீட்டிற்கு திரும்பிய பின்பும் கைகளை சவர்க்காரமிட்டு கை கழுவிய பின்பே வீட்டிற்கு உள்ளே செல்ல வேண்டும்.

5. பொதுமக்கள் அவசியமான விடயங்கள் தவிர வெளியே செல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

6. அவசியமற்ற விழாக்கள், ஒன்று கூடல்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும் அல்லது பிற்போடவேண்டும். கட்டாயமாக நடாத்தப்படவேண்டிய நிகழ்வுகளில் சுகாதார, பாதுகாப்பு நடைமுறைகள் இறுக்கமாக பின்பற்றப்பட வேண்டும்.

7. பொதுப்போக்குவரத்து வாகனங்களில் ஆசனங்களுக்கு ஏற்ற எண்ணிக்கையான பயணிகள் மட்டுமே ஏற்றிச் செல்லப்படுவதுடன் அனைவரும் முககவசம் அணிவதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

8. பொதுமக்கள் ஒன்று கூடும் சந்தைகள், வர்த்தக நிலையங்கள் போன்ற இடங்களிலும் சுகாதாரப்பாதுகாப்பு நடைமுறைகள் இறுக்கமாக பின்பற்றப்படவேண்டும்.

9. வணக்க தலங்களில் நிகழ்வுகள் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களின் எண்ணிக்கையுடன்; நடாத்தப்படுவதுடன் இதற்காக வழங்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டும்.

வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன்

மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

வடமாகாணம்