புதினங்களின் சங்கமம்

யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை முடக்க மாணவர் ஒன்றியம் தீர்மானம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகிய மூவரையும் வழக்கிலுருந்து முழுமையாக விடுவிக்கும் வரை கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்கப் போவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

இந்தத் தீர்மானத்தை எழுத்துமூலமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரிக்கு மாணவர் ஒன்றியத்தினர் அறிவித்துள்ளனர்.

நாட்டில் ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையடுத்து ஒரு மாதகாலத்துக்கு மூடப்பட்டிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் மாணவர் ஒன்றியம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 3ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் ஒளிப்படம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான பதாதைகள் என்பன மாணவர் ஒன்றியத்தின் அலுவலக அறையிலிருந்து மீட்கப்பட்டன.

இதனையடுத்து மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரும் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலையில் தியாக தீபம் திலீபனின் ஒளிப்படம் மீட்கப்பட்டதையடுத்து சிற்றுண்டிச்சாலை நடத்துனரும் கைது செய்யப்பட்டார்.

மூவர் மீதும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 4 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர். இதனால் மூவரும் கடந்த 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனடிப்படையில் கடந்த 16ஆம் திகதி மூவரையும் நீதிமன்று பிணையில் விடுவித்து வழக்கை செப்ரெம்பர் 12ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகிய மூவரை வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கும் வரை கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்கப் போவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

தமது போராட்டத்துக்கு இடையூறு விளைவிக்க பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் பல்கலைக்கழகத்தை முழுமையாக முடக்கும் நிலைக்கு தாம் தள்ளப்படுவார்கள் என்றும் மாணவர் ஒன்றியம், தகுதிவாய்ந்த அதிகாரிக்கு சுட்டிக்காட்டியுள்ளது.