புதினங்களின் சங்கமம்

யாழ்.மாநகர காவல் படைச் சீருடை விவகாரத்தால் சிக்கல்; விசாரணை தொடர்கிறது!

யாழ்.மாநகரசபையினால் சுகாதார நடைமுறைகளை கண்காணித்தல், கழிவகற்றல் பொறிமுறையை கண்காணித்தல், மற்றும் மாநகரின் ஒழுங்கு உள்ளிட்டவற்றை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்ட காவல் படையின் சீரூடை விவகாரம் சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாக தெரியவருகிறது.

குறித்த சீருடை தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆளுகைப் பகுதிகளுக்குள் காவல்துறையினர் பயன்படுத்திய சீருடையைப் போன்ற வர்ணத்தினால் வடிவமைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சீருடைகளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பொலிஸார் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்திருப்பதாக தெரியவருகிறது.

இதேவேளை,

யாழ்.மாநகரசபை ஆணையாளர், பிரதம வருமான வரிப் பரிசோதகர் மற்றும் குறித்த காவல் படையில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்டிருந்த மாநகரசபை ஊழியர்கள் ஐவர் உட்பட்ட ஏழு பேருக்கு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் 03 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் விசாரணை நடைபெற்றுவருவதாக தெரியவந்துள்ளது.

கொழும்பிலிருந்து கிடைக்கப்பெற்ற பணிப்பிற்கு அமைய குறித்த நடவடிக்கை முன்னெடுக்கபட்டுவருவதாகவும் சொல்லப்படுகிறது.

யாழ்.மாநகரில் சுகாதார நடைமுறைகளை கண்காணித்தல், கழிவகற்றல் பொறிமுறையை கண்காணித்தல், மற்றும் மாநகரின் ஒழுங்கு உள்ளிட்டவற்றை கண்காணிப்பதற்காக குறித்த மாநகர பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் நாளை அதன் அங்குராட்பணம் இடம்பெறும் என்றும் இன்று அதற்கான பரீட்சார்த்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் இன்று காலையில் ஒளிப்படங்களும் காணொளிகளும் வெளியாகியிருந்தமை தெரிந்ததே.