FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்!! பிளாஸ்டிக் பெரலும் பிளாஸ்ரிக் உறையும்!!

இதுவரை கைதான அனைவரையும் விசாரித்ததில் ஒரே நாளில் , ஒரே நேரத்தில் , இலங்கையின் 9 மாகாணங்களிலும் பாரிய தொடர் குண்டு வெடிப்புகளை நடத்துவதற்கு திட்டம் இருந்ததாக தெரியவந்துள்ளது. அதற்காக வெடி பொருட்கள் அடங்கிய குண்டுகளை நிரப்பிக் கொண்டு செல்லக் கூடிய, தோளில் சுமக்கும் 20 backpack பைகளை , பத்தரைமுல்லையிலுள்ள ஒரு விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடையில் வாங்கியுள்ளார்கள். 15 முதல் 20 கிலோ எடையுள்ள பொருட்களை கொண்டு செல்லக் கூடிய backpack bagகளை அந்தக் கடையில் தேர்வு செய்து எடுத்துள்ளார்கள்.

அந்தப் backpack bag பைகள் ,தற்கொலைதாரிகள் வெடித்துச் சிதறக் கொண்டு செல்லும் குண்டுகளை நிரப்பி , நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளுக்கு கொண்டு செல்வதற்கேயாகும். அதோடு வாகனங்களில் பொருத்தும் குண்டுகளையும் , நாடு முழுவதும் வெடிக்க வைக்க வேண்டும் என்பது , அத்தாக்குதலலோடு இணைந்த தாக்குதல் திட்டமாகும். ஏப்ரல் 16ம் திகதி இரவு வேளையில் காத்தான்குடியில் வைத்து எதிர்பாராதவிதமாக ஒரு வாகன குண்டு வெடிக்கிறது. அது ஒரு மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குண்டாகும்.

இன்னொரு குண்டு வான் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்தது. கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்துக்கு அருகில் கண்டு பிடிக்கப்பட்டு , குண்டு செயலிழக்க வைக்கும் படையினரால், செயலிழக்க வைத்து வெடிக்க வைத்தது அந்த வாகனக் குண்டேயாகும். தவிர மோட்டார் சைக்கிள்கள், லொறிகள் மற்றும் வான்களில் நிரப்பிய குண்டுகளும் கொண்ட தாக்குதல் திட்டமும் , மனித வெடி குண்டு தாக்குதல் திட்டமும் அவர்களுக்குள் ஏற்படும் கருத்து முரண்பாட்டால் தடைப்பட்டுவிடுகிறது.

முதலாவது தாக்குதலில் மனித குண்டாகப் போவதற்கு, சஹரானின் பெயர் இருக்கவில்லை. அவர்களுக்குள் ஏற்பட்ட பிரிவால் ஏற்பட்ட ஆள் பற்றாக் குறையால் , சஹரான் சங்கிரிலா ஹோட்டல் தாக்குதலுக்காக தன்னைத்தானே வெடித்துக் கொள்வதெனும் முடிவுக்கு இறுதி நேரத்தில் வருகிறான். இல்லாது போயிருந்தால் ஏனைய தாக்குதல்களையும் நெறிப்படுத்தி இதைவிட ஒரு பேரழிவை ஏற்படுத்தியருப்பான்.

இறுதித் தருணத்தில் அவர்களுக்குள் ஏற்படும் முரண்பாட்டினால் , அவர்களது தலைமையை நவ்பர் மௌலவி பறித்துக் கொள்கிறார். குற்றப் புலனாய்வு துறையினரது தகவலின்படி அவர் நாரம்மல பகுதி வாசியாவார். அவரும் தற்போது கைதாகியுள்ளார்.

நவ்பர் மௌலவி மனித குண்டு வெடிப்புக்கு எதிரான கருத்துகளை முன் வைத்து, சஹரானின் தலைமையை தன் வசப்படுத்திக் கொண்டுள்ளார். அல்ஹாவின் உபதேசங்களில் தன்னை அழித்துக் கொண்டு இன்னோருவரைக் கொல்வதோ அல்லது தற்கொலை செய்து கொள்வதோ குறித்து குரானில் இல்லையென நவ்பர் மௌலவியின் கருத்து முரண்பாட்டினால் அவர்களுக்குள் பிளவு தோன்றியுள்ளது.

தவிர சஹரான் தனது குடும்பத்துக்கு மேலதிக சலுகைகளை வழங்கியமை, தற்கொலைதாரிகளாக இருந்தோரில் சிலரிடம் மனக் கசப்புகளை உருவாக்கியுள்ளது.

சஹரானோடு தனக்கு எந்தவொரு உறவும் இல்லையென சர்வதேச ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த சஹரானின் சகோதிரியான முகமது ஹசீம் மதானியாவுக்கு சஹரான் அடிக்கடி பணம் கொடுத்து வந்துள்ளான்.

இறுதியாக மதானியாவை கொழும்புக்கு அழைத்து 20 லட்சம் ரூபாய் பணத்தை செலவுக்கு வைத்துக் கொள்ளுமாறு சஹரான் கொடுத்திருக்கிறான். அப்படி சஹரானின் குடும்பத்தினருக்கு அமைப்பின் பணத்தை அடிக்கடி வாரி வழங்கி வந்தமையும் மற்றவர்களுக்கு பிடிக்காமல் போயுள்ளது. அது நவ்பர் மௌலவி தலைமைத்துவத்தை பொறுப்பேற்றதாக சொன்னதும் பூகம்பமாக வெடித்துள்ளது.

நவ்பர் மௌலவி , தனது ஆதரவானவர்களை தனியாக அழைத்து , என்டேறுமுல்லையிலுள்ள ஒரு அமைச்சரின் சகோதரிக்கு சொந்தமான வீட்டில் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். அந்த வீட்டை அவர்கள் 60 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு எடுத்திருந்துள்ளார்கள்.

அந்த வாடகை வீட்டில் , மாவனல்லை புத்தர் சிலைகளை சேதமாக்கியவரும் , வனாத்திவில்லு பயிற்சி முகாம் தொடர்பாக தேடப்பட்ட நபருமான , முகமது இவுஹயிம் சாதிக் அப்துல் ஹக் , அவனது மனைவி பாத்திமா லதீபா மற்றும் அவனது இளைய சகோதரனான முகமது இவுஹயிம் சாஹிட் அப்துல் ஹக் ஆகிய மூவரும் தங்கியிருந்துள்ளார்கள்.

தவிர தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் கம்பளை பாடசாலை ஆசிரியரான முகமது இர்சாத் , மாவனல்ல வாசியான ரனீஸ் மற்றும் குருநாகல் வாசியான முகமது நவ்பர் ஆகியோர் இடையிடையே அங்கு வந்து தங்கிச் சென்றுள்ளனர்.

சஹரான் இவர்கள் அனைவரையும் மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்த இருந்துள்ளான். அவர்களுடன் சிரியாவில் ISIS பயிற்சி பெற்றவர்களும் இருந்ததால் , தனது குறிக்கோளை பிரச்சனையில்லாமல் நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கையில் சஹரானிடம் கடைசிவரை இருந்துள்ளது. ஆனால் அங்கிருந்த அனைவரும் மனித வெடி குண்டுகளாக மாறத் தயாராக இருந்திருக்கவில்லை. நவ்பர் மௌலவியோடு , சஹரானை எதிர்த்தோர் இணைந்ததனால் , உயிர்த்தெழுதல் ஞாயிறு தாக்குதலுக்கு தன்னோடு இருப்பவர்களை மட்டும் பயன்படத்த வேண்டிய நிலைக்கு சஹரான் தள்ளப்பட்டுள்ளான்.

ஏப்பரல் 21ம் திகதி உயிர்த்தெழுதல் ஞாயிறு தாக்குதல் நடக்கிறது. அத் தாக்குதலை அறிந்ததும் அச்சத்துக்குள்ளாகும் என்டேறுமுல்லை வீட்டில் இருந்தோர் , அன்றிரவே அந்த வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அங்கு தங்கியிருந்த முகமது இர்சாட் உல்பனையில் உள்ள அவரது வீட்டுக்கே போயுள்ளார். முகமது ரனீஸ் மற்றும் முகமது நவ்பர் மட்டக்களப்புக்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளார்கள். அப்படிச் செல்ல முயல்கையில் , பாதி வழியில் தம்புள்ளை போலீசாரிடம் அவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள்.

சாதிக் தனது மனைவி மற்றும் சகோதரனோடு நுவரெலியாவுக்கு தப்பிச் செல்கிறான். அவர்கள் தலை முடியை ஒட்ட வெட்டி , தாடி இல்லாமல் , சிங்களவர்கள் போல தெரியும் விதத்தில் , தெருவண் சரணய் என பௌத்த மத ஸ்டிக்கர் ஒட்டிய வான் ஒன்றில் நாட்டின் பல பாகங்களுக்கும் செய்வதறியாது சுற்றித் திரிந்துள்ளார்கள். இறுதியாக தனது மனைவியை மறைந்து வைத்திருக்க வழியே இல்லாது போனதால் , மாவனல்லையில் இறக்கி விட்டுச் செல்கிறான். அதோடு அவளை குற்றவியல் தடுப்பு பிரிவு கைது செய்கிறது.

சாதிக் மற்றும் சாஹிட் ஆகிய இருவரும் சில தினங்களுக்கு பின் , அவர்களது உறவினர் ஒருவரது கம்பளையிலுள்ள பாதணி விற்கும் கடையொன்றுக்குள் ஒழித்திருக்கும் போது சிக்கினார்கள்.

“சஹரான் இப்படி ஒரு வேலை செய்யப் போகிறார் என நாங்கள் அறிந்திருக்கவில்லை. அது தெரிந்ததும் நாங்கள் பயந்தோம். அதனால் அதை எதிர்த்தோம். எங்கள் மதத்தில் தற்கொலை செய்து கொள்ளச் சொல்லிச் சொல்லவே இல்லை” என விசாரணையின் போது சாதிக் போலீசாரிடம் தெரிவித்துள்ளான்.

தொடரும் ……