தற்கொலை தாக்குதலுக்கு உதவிய மென்பொருள் பொறியியலாளரை இந்தியா கண்காணித்ததாம்!!(video)
தற்கொலை தாக்குதலுக்கு உதவிய மென்பொருள் பொறியியலாளரை இந்தியா கண்காணித்ததாம்!!(video)
தாக்குதலுக்கு தொழில்நுட்ப மற்றும் ஊக்குவிப்பு ஒத்துழைப்பு வழங்கியதாகக் கூறப்படும் மென்பொருள் பொறியியலாளர் ஒருவர் தொடர்பில் 3 வருடங்களுக்கு முன்னர் இருந்தே இந்தியா கவனம் செலுத்தியிருந்ததாக ரொய்ட்டர் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
24 வயதான ஆதில் அமீஸ் எனப்படும் நபர் ஏப்ரல் 25ஆம் திகதி கைது செய்யப்பட்டமையை பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர உறுதிப்படுத்தியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதில் அமீஸ் என்பவர் தமது LinkedIn கணக்கில் சிரேஷ்ட இணைய வடிவமைப்பாளர் மற்றும் கணினி பொறியியலாளராகத் தம்மை அடையாளப்படுத்தியுள்ளதாக ரொய்டர் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
அவர் பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் கணினிப் பட்டப்படிப்பையும் அரசறிவியல் துறையில் பட்டப்படிப்பையும் பூர்த்தி செய்துள்ளதாக ரொய்ட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதில் அமீஸ் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புபட்டுள்ளதாக 2016ஆம் ஆண்டில் இரண்டு சந்தர்ப்பங்களில் இந்திய புலனாய்வுப் பிரிவு நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.
அஹமதாபாத்திலுள்ள தேவாலயமொன்று மீது தாக்குதல் நடத்துவதற்கு முயற்சித்த இருவருடன் பேஸ்புக், வாட்ஸப் மற்றும் டெலிகிராம் ஊடாக ஆதில் கலந்துரையாடியதாக இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவு நீதிமன்றுக்கு ஒரு சந்தர்ப்பத்தில் அறிவித்தது.
2016ஆம் ஆண்டில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தொடர்பில் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மேலும் மூன்று இந்தியப் பிரஜைகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அந்த பிரசார நடவடிக்கைகளுக்கான உபகரணங்களை வழங்கியதாக ஆதிலுக்கு எதிராக விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
எவ்வாறாயினும், இது தொடர்பில் இந்தியா, இலங்கை அதிகாரிகளுக்கு அறிவித்திருந்ததா என்பதை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக ரொய்ட்ர்ஸ் செய்திச்சேவை குறிப்பிட்டுள்ளது.
ஆதில் அமீஸ் தொடர்பில் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதா என்பதையும் உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 தொடர் தாக்குதல்களை நடத்தியதாக இலங்கை அதிகாரிகள் கூறும் தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஜமாதே மில்லது இப்ராஹிம் எனப்படும் இரு அமைப்புகளுடனும் ஆதில் அமீஸூக்கு நெருங்கிய தொடர்புகள் காணப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இரு அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் இருவர் தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
டார்க் வெப் மற்றும் வாட்ஸப் ஊடகவே இந்தத் தொடர்புகள் பேணப்பட்டதுடன், இந்த தொடர் தாக்குதல்களுக்கு அவர் உதவினாரா அல்லது திட்டமிட்டு அவற்றை நடைமுறைப்படுத்தினாரா என்பதை விசாரணைக்குழு இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் ஆதில் அமீஸ், ஜமீல், சஹ்ரான், இன்பாஸ் இப்ராஹிம் மற்றும் இல்ஹாம் இப்ராஹிம் ஆகிய பயங்கரவாதிகள் சந்தித்துள்ளதாக விசாரணைக்குழுவை மேற்கோள்காட்டி ரொய்ட்ர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆதில், சஹ்ரான் மற்றும் இப்ராஹிம் சகோதரர்களுடன் வண்ணாத்திவில்லு பகுதியில் காணியொன்றை வாடகைக்குப் பெற்று பயிற்சி முகாம் நடத்திச்செல்லப்பட்டுள்ளதாக, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தகவல்களை மேற்கோள்காட்டி ரொய்ட்ர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்டு நான்கு நாட்களின் பின்னர் பொலிஸார் ஆதிலின் வீட்டை சோதனைக்கு உட்படுத்தியதுடன், அவரின் கணினியிலிருந்த அனைத்து தகவல்களும் அழிக்கப்பட்டிருந்ததாக ரொய்டர்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதில் பயங்கரவாதக் குழுவிற்கு தொடர்பாடல் வசதி, கூட்டங்கள் மற்றும் பயிற்சி முகாம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தி, தாக்குதலில் முக்கிய பங்காற்றியுள்ளதாக இராணுவத் தகவல்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது.