புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடா, ஐரோப்பா வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு முக்கிய தகவல்!

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இலங்கை தமிழர்கள் பலர் கனடா மற்றும் ஐரோப்பாவில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இரட்டை குடியுரிமை பெற்றுக் கொள்வது காலத்தின் தேவையாக உள்ளது. ஏனெனில் உங்களால் கைவிடப்பட்ட சொத்துகள் தற்போது ஆக்கிரமிப்பில் உள்ளன.அண்மைக்காலத்தில் இலங்கையிலுள்ள அல்லது இலங்கையராக வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்ற பலரதும் பேசுபொருளாக மாறியிருக்கும் ஒரு விடயம் தான் இந்த “இரட்டைப் பிரஜாவுரிமை”.

மிக நீண்டகாலத்துக்கு முன்பதாகவே இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் முறையானது நடைமுறையில் உள்ள போதிலும், போருக்கு பிந்திய அபிவிருத்தி சூழல், பலரையும் இரட்டை பிரஜாவுரிமையின் கீழ் இலங்கைக்கு வரவும், அதன் மூலமான நலன்களை உச்சமாகப் பெற்றுக் கொள்ளவும் தூண்டியுள்ளது எனலாம்.

நீண்ட காலமாக இலங்கை வராது வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் காணிகள் உள்ளிட்ட சொத்துக்கள் தற்போது அபகரிக்கப்படுகின்றன. குறிப்பாக படையினர் பல்வேறு தேவைகளுக்காக காணிகளை அபகரித்து வருகின்றனர்.இதில் உங்களது காணிகளும் இருக்கக்கூடும். மேலும் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டும் உங்களது காணிகள் உள்ளிட்ட சொத்துகள் அபகரிக்கப்படுகின்றன.

இவ்வாறான நிலையில், உங்கள் சொத்துகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாத்துக் கொள்வதற்கும், ஏனைய தேவைகளுக்கும் நீங்கள் இரட்டை குடியுரிமை பெற்றிருப்பது காலத்தின் தேவையாக உள்ளது.

இரட்டைப் பிரஜாவுரிமை மூலமாக, வெளிநாட்டில் குறித்த நாட்டின் நலன்களையும், இலங்கையில் இந்நாட்டின் சாதாரண குடிமகனாவும் சகல நன்மைகளையும் அனுபவிக்க முடியும்.இலங்கையில் வெளிநாட்டவர்கள் சொத்துக்களை கொள்வனவு செய்வதில் சட்டச்சிக்கல் உள்ள நிலையில், இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் இலகுவாக அசையும் மற்றும் அசையாத ஆதன சொத்துக்களை கொள்வனவு செய்ய முடியும்.

அண்மைக்காலத்தில், இலங்கையின் ஆதனத்துறையின் கேள்வி அதிகரித்து செல்ல இதுவும் ஒரு காரணமாக உள்ளது.

இலங்கையில் வெளிநாட்டவர்களாக வணிகத்தினை ஆரம்பிப்பதிலும் பார்க்க, இலங்கையராக ஒப்பீட்டளவில் செலவினக் குறைப்புடன் வணிகத்தினை ஆரம்பிக்க முடியும்.

மேலே குறிப்பிட்ட அனைத்துமே, அடிப்படையாக ஒருவர் இரட்டைப் பிரஜாவுரிமை பெறுவதன் மூலமாக பெற்றுக் கொள்ளக் கூடிய நன்மைகள் ஆகும்.

இதனைத் தவிரவும், நிதி ரீதியாக, வரி ரீதியாக மேலும் பல நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

இந்நிலையில், இரட்டைப் பிரஜாவுரிமைக்கு ஏன் திடீரென கேள்வி நிலை அதிகரித்துள்ளது? யார் எல்லாம் இதனை பெறத்தகுதி உடையவர்களாக உள்ளார்கள்? எப்படி இதனை பெற்றுக்கொள்ள முடியும்? என அறிந்திருப்பது அவசியம் அல்லவா!

இது குறித்த முழுமையான தகவல்களை இங்கே காண முடியும்,

01. இரட்டைக் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கும் போது, 1948ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க குடியுரிமைச் சட்டத்தின் 19, 20 மற்றும் 21ஆம் பிரிவுகளின் கீழ், இலங்கை பிரஜாவுரிமையை/ குடியுரிமையை இழந்த ஒருவருக்கு அல்லது இலங்கைப் பிரஜாவுரிமையை/ குடியுரிமையை இழக்க அண்மித்திருக்கும் ஒருவருக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

குடியுரிமைச் சட்டத்தின் 19(2) ஆம் பிரிவின் கீழான ஏற்பாடுகளின் கீழ் பிறிதொரு நாட்டின் குடியுரிமையை பெற்றுக் கொண்டதன் பேரில், இலங்கைக் குடியுரிமையை இழந்த ஒருவருக்கு, அல்லது
குடியுரிமைச் சட்டத்தின் 19(3) ஆம் பிரிவின் கீழான ஏற்பாடுகளின் கீழ் பிறிதொரு நாட்டின் குடியுரிமையைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவைப்பாட்டின் பேரில், இலங்கைக் குடியுரிமையை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்வதற்குத் தேவையான ஒருவருக்கு மட்டும் இரட்டைக் குடியுரிமை வழங்கக் கோரி விண்ணப்பிக்க முடியும்.

02. விண்ணப்பப் படிவத்தினை பூரணப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள்

விண்ணப்பப் படிவத்தை ஆங்கில மொழியில் பூரணப்படுத்துதல் வேண்டும். (தயவு செய்து ஆங்கில பெரிய எழுத்துக்களைப் (ENGLISH BLOCK CAPITALS) பயன்படுத்தவும்).
விண்ணப்பப் படிவத்தில் * குறியீடு இடப்பட்டுள்ள எல்லா இடங்களிலும்/ சந்தர்ப்பங்களிலும் தேவையற்ற சொல்லை அல்லது சொற்களை வெட்டிவிடவும்.
விண்ணப்பப் படிவத்தில் தேவையற்ற/ ஏற்புடையதாகாத பிரிவுகள்/ பகுதிகள் இருப்பின் உரிய இடங்களில் “ஏற்புடையதாகாது” எனக் குறிப்பிடவும்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குடும்ப அங்கத்தவர்களாக இருப்பினும் ஒவ்வொருவருக்குமாக தனித் தனியாக விண்ணப்பப் படிவங்கள் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும் என்பதுடன், 3.5cm x 4.5cm அளவிலான 03 வர்ணப் புகைப்படங்களையும் விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பித்தல் வேண்டும். அவற்றுள் ஒரு புகைப்படத்தை விண்ணப்பப் படிவத்தின் வலது பக்க மேல் மூலையில், புகைப்படத்தை ஒட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள கூண்டினுள் ஒட்டவும்.
இரட்டைக் குடியுரிமைக்காக விண்ணப்பிப்பதற்கு, விண்ணப்பப் படிவத்தில் இல. 1 இன் கீழ் A தொடக்கம் G வரை காட்டப்பட்டுள்ள தகைமைகளுள் ஏதேனுமொரு தகைமையினை பூர்த்தி செய்திருத்தல் போதுமானதாகும். அதற்கமை உரிய தகைமை குறிப்பிடப்பட்டுள்ள கூண்டினுள் (√) அடையாளத்தை இடவும்.
விண்ணப்பப் படிவத்தின் 6 ஆம் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள உறுதிமொழியை/ சத்தியப் பிரமாணத்தை, விண்ணப்பதாரி பூரணப்படுத்துதல் வேண்டும் என்பதுடன், அந்த உறுதிமொழி/ சத்தியப் பிரமாணம், சமாதான நீதவான் ஒருவரினால் அல்லது சத்தியப் பிரமாண ஆணையாளர் ஒருவரினால் அத்தாட்சிப்படுத்தப்பட்டிருத்தலும் வேண்டும்.
கணினி தரவுப் பத்திரத்தை ஆங்கில பெரிய எழுத்தில் (ENGLISH BLOCK CAPITALS) பூரணப்படுத்துதல் வேண்டும்.
தமது வயது 22 வருடங்களுக்குக் குறைந்த திருமணமாகாத விண்ணப்பதாரிகள் மட்டும், இரட்டைக் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பப் படிவத்திற்கு மேலதிகமாக இணைப்பு 03 ஐயும் பூரணப்படுத்துதல் வேண்டும் என்பதுடன், தமது வயது 22 வருடங்களும், 06 மாதங்களும் கடந்ததன் பின்னர் சமர்ப்பிக்கப்படுகின்ற விண்ணப்பங்கள் இவ் வகையின் கீழ் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

03. இரட்டைக் குடியுரிமைக்காக விண்ணப்பிப்பதற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

விண்ணப்பதாரியின் பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி அல்லது அதன் அத்தாட்சிப்படுத்தப்பட்ட நகல் பிரதி (குறிப்பு 01 ஐப் பார்க்க). (விண்ணப்பதாரி இலங்கை பிரஜாவுரிமையை பெற்றுக் கொண்டிருப்பது பதிவின் மூலமாயின், குடியுரிமைச் சட்டத்தின் கீழ் விநியோகிக்கப்பட்ட குடியுரிமைச் சான்றிதழை அல்லது அதன் அத்தாட்சிப்படுத்தப்பட்ட நகல் பிரதியினை சமர்ப்பிக்கவும்).
விண்ணப்பதாரி விவாகமானவராயின், விவாகச் சான்றிதழின் மூலப்பிரதி அல்லது அதன் அத்தாட்சிப்படுத்தப்பட்ட நகல் பிரதி (குறிப்பு 01 ஐப் பார்க்க).
இரட்டைக் குடியுரிமைக்காக விண்ணப்பிப்பவர் குடியுரிமைச் சட்டத்தின் 19(2) ஆம் பிரிவின் கீழ், இலங்கைக் குடியுரிமையை இழந்த ஒருவராக இருக்கும் நிலையில் இருக்கும் ஒருவராக இருப்பின், அவர் பின்வரும் ஆவணங்ளைச் சமர்ப்பித்தல் வேண்டும்.
a. வெளிநாட்டு குடியுரிமைச் சான்றிதழின் மூலப்பிரதி அல்லது அதன் அத்தாட்சிப்படுத்தப்பட்ட நகல் பிரதி (குறிப்பு 01 ஐப் பார்க்க).
b. தற்சமயம் வெளிநாட்டு குடியுரிமையைக் கொண்டுள்ள நாட்டினால் விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டின் தரவுகள் பதியப்பட்டுள்ள பக்கத்தினதும், உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள பக்கங்களினதும் அத்தாட்சிப்படுத்தப்பட்ட நகல் பிரதிகள் (குறிப்பு 01 ஐப் பார்க்க).