புதினங்களின் சங்கமம்

மன்னாரில் துாக்கில் தொங்கி மரணமான சிறுவன்!! நடந்தது என்ன?

மன்னார் பேசாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் மரணம் குறித்து உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மன்னார் பேசாலை 7ஆம் வட்டாரம் யூட் வீதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன்
கடந்த 12ஆம் திகதி தனது வீட்டில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில்
சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார்.

குறித்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மன்னார் பொது
வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு, பின்னர் நேற்று உறவினர்களிடம்
கையளிக்கப்பட்டிருந்தது.

குறித்த சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து, சிறுவனின்
உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

மேலும் உயிரிழந்த சிறுவன், எழுதிய கடிதம் ஒன்றும் பொலிஸாரினால்
மீட்கப்பட்டுள்ளது. குறித்த கடிதம் கடந்த 08-05-2019ஆம் திகதி
எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் தனக்கும் தனது தந்தைக்கும் எவ்வித
தொடர்பும் இல்லை என கூறப்பட்டுள்ளது.

அத்தோடு, தான் கேட்பவை எவற்றையும் தந்தை வாங்கித்தருவது இல்லை என்றும்
தனது தந்தை மறுமனம் செய்தது தனக்கு பிடிக்கவில்லையென்றும் அந்த கடிதத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் இந்தியா சென்றால் அங்கே தன்னை நன்றாக கவனிப்பார்கள் என்பதோடு,
இந்தியா செல்கின்றேன் எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக உறவினர்கள் வழங்கிய முறைப்பாட்டிற்கு
அமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை சிறுவனின் தாயார் கடந்த வருடம் காலமாகியுள்ளார் என்றும்
தந்தையார் மறுமணம் முடித்த நிலையிலேயே இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளது
என்றும் அறியப்படுகிறது.