கலா அக்காவை என்ன செய்வது?? சட்டமா அதிபரிடம் நீதிமன்றம் கேட்கின்றது!!
தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிவிக்குமாறு சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிரான வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
“உத்தியோகபூர்வப் பணி” ஜனாதிபதி மக்கள் சேவை என்ற தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் 8 ஆவது நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த வருடம் ஜுலை மாதம் 02ஆம் திகதி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழவேண்டுமானால் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள உருவாக வேண்டும் என தெரிவித்திருந்தார்.
யாழ் குடாநாட்டில் தீவிரமடைந்துள்ள போதைப்பொருள் பாவனை, துஸ்பிரயோகங்கள் தொடர்பில் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்ததுடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதையடுத்து, மகளிர் விவகார இராஜாங்க அமைச்சராக இருந்த விஜயகலா மகேஸ்வரனின் அமைச்சு பறிக்கப்பட்டது.
விஜயகலா மகேஸ்வரனின் கருத்து தென்னிலங்கை சிங்கள அரசியல்வாதிகள் மத்தியில் பேசுபொருளாக மாறியிருந்தது.
குறித்த விடயம் தொடர்பில் வாக்குமுலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 08ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட விஜயகலா மகேஸ்வரன், 5 லட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
குறித்த வழக்கு மீதான விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினமும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக எடுக்கவுள்ள நடவடிக்கை தொடர்பில் அறிவிக்குமாறு சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் அறிவித்துள்ளது.