புதினங்களின் சங்கமம்

150 பேருடன் திருமணம் நடத்த அனுமதி , தொடரும் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை!!

இலங்கையில் கொரோனா தொற்று பரம்பலை கட்டுப்படுத்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கட்டுப்பாடுகளில் சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு புதிய சுகாதார வழிகாட்டி ஒன்று சுகாதார அமைசினால் சற்று முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது.

கோவிட் 19 கட்டுபாடுகளை மேலும் தளா்த்தும் வகையிலான அறிவிப்புக்களுடன் புதிய சுகாதார வழிகாட்டல் அடங்கிய சுற்றறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இன்று வெளியிட்டுள்ளார்.

புதிய சுற்றறிக்கையின் பிரகாரம் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

புதிய சுற்றிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் வருமாறு,

வழிபாட்டுக் தலங்களை திறக்க அனுமதி.

ஆடைத் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பிற தொழில் நிறுவனங்களை திறக்க அனுமதிக்கப்படுகிறது.

திருமண நிகழ்வுகளை நிகழ்விடங்களின் 25 வீத திறன்வரம்பில் நடத்த முடியும். பங்கேற்பாளர்களின் உச்ச வரம்பு 150 ஆக நிர்ணயிக்கப்படுகிறது.

பொதுக் கூட்டங்களை மண்டபத்தின் 25 இருக்கைத் திறனுடன் ஆட்களை கூட்டி நடத்த முடியும்.

அத்தியாவசிய சேவைகளை குறைந்தளவு பணியாளர்களுடன் முன்னெடுக்க அனுமதி.

தனியார் ரெக்ஸி வாகனங்களில் இருக்கை எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்ற அனுமதிக்கப்படும்.

பொதுத் சந்தைகளை கோவிட் கட்டுப்பாட்டு செயலணி அதிகாரிகளின் வழிகாட்டல்களுடன் திறக்க முடியும்.

பொதுப் போக்குவரத்து வாகனங்கள் இருக்கைத் திறனில் 50 வீதமான பயணிகளை ஏற்ற அனுமதிக்கப்படும். மேல் மாகாணத்தில் விசேட சூழலில் இது 30 வீதமாக மட்டுப்படுத்தப்படும்.

பரீட்சைகளை நடத்த அனுமதி வழங்கப்படும்.

வங்கிகள் நிதி நிறுவனங்கள் ஒரே நேரத்தில் 10-க்கு மேற்படாத வாடிக்கையாளர்கள் மற்றும் குறைந்தளவு பணியாளர்களுடன் சேவைகளை மேற்கொள்ள முடியும்.

பொருளாதார மத்திய நிலையங்களை கடுமையான சுகாதார கட்டப்பாட்டு விதிகளின் கீழ் திறக்க முடியும்.