புதினங்களின் சங்கமம்

எண ஆச்சி செப்தெம்பர் வரை கொஞ்சம் பொறண…..!

அவரெல்லோ குடும்பமாய் வருவாரண – உனக்கு கொடியேத்த.
தீத்தத்தில நனைய நாங்களுமெல்லோ வரிசையாய் இருப்பம் – கொஞ்சம் பொறண..
முன்கொம்பு பிடிக்க புலிப்பல்லு போட்டெல்லோ அந்தாளும் வரும்…
பண்ணாய் படிக்க இன்னார் இல்லையென்றால் எப்படி பூசை வைக்க ?
மணியடிக்க தேங்காய் உடைக்க குடைபிடிக்க
தீவட்டி பிடிக்க உபயம் தூக்க நிலம் கூட்டவெல்லாம் தனிதனியாய் ஆளிருக்கு
கொஞ்சம் பொறுத்தா வந்திடுவாங்கள்
திறம் மேளமொடு பீப்பிக்காரன் ஊரோடு
தங்கி பகலிரவாய் வாசிப்பான்
வடக்கு வீதி சமா இல்லாம உனக்கென்ன
திருவிழாவோ – கொஞ்சம் பொறண…
படகெல்லாம் திருத்தி சாமியோட போட்டிக்கோடி ஊர்பெடியள் உழைக்கவேணும், இந்த வருஷ ஓட்டோ லீசிங் கட்ட உன்ன தானே நம்பியிருக்கம்…
அன்னதானமெண்டா சும்மாவோ அணையாத அடுப்போட ஊர்ப் பூசணி வெட்டி
சாதமும் சாம்பாறும் இல்லாம உனக்கென்ன
அவசரமாய் கிடக்கு – கொஞ்சம் பொறு…
ஊரெல்லாம் பீக்கர் கட்டி பகலிரவாய் பாட்டு போட்டு சப்பறத்து இரவண்டு தமிழ்நாட்டு
பாட்டுகாரன் வந்து வித்தைகாட்ட – ச்சா அதெல்லோ விசேசம் – கொஞ்சம் பொறு !
கனடா சுவிஸ் லண்டனெண்டு சேத்த காசு
புழுதி பிடிக்காம திருவிழாக்க சிலவழிச்சு
அடுத்த கொமிட்டியில கணக்கு வாசிச்சா தானே திருப்பியும் பதவி வரும்….!
தட்டி பந்தல், தண்ணீர் பந்தல், பிஞ்சுக் கனிக் கதலி முடியில்லா தேங்காய் பிஞ்சவோலைப் பெட்டியோட கடை போட்டா எத்தனை சனம் நேர்த்தி வைச்சு கியூவில் நிற்கும்.
பாதையில் கல்லு கொண்டுவந்து கட்டின மாபிள் கக்கூசில லண்டன் பேரன் தான் முதல்ல இருக்கவேணும் – உனக்கு கொடியேறினாதான் அதுகள் ஊர் வரும் !
எண ஆச்சி செப்தெம்பர் வரை கொஞ்சம் பொறண…..!