புதினங்களின் சங்கமம்

கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் 2 ஆண்டுகளில் இறந்து விடுவார்களா?

கொடிய கொரோனா வைரஸ் தொற்று எதிர்த்துப் போராடுவதற்காக பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள், மருத்துவர்கள் மற்றும் அரசுகள் கட்டாயம் தடுப்பூசி எடுத்து கொள்ளுங்கள் என்பதே. இந்நிலையில் நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு விஞ்ஞானி லூக் மாண்டாக்னியர் “கோவிட் தொற்றுக்கு எதிர்க்க தடுப்பூசி பெற்றவர்கள் இரண்டாண்டுகளுக்கு மேல் உயிர்வாழ வாய்ப்பில்லை” என்று கூறியதாக ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.

நோபல் பரிசின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, 2008ம் ஆண்டில் மனித நோயெதிர்ப்பு குறைபாடுள்ள வைரஸ் (எச்.ஐ.வி) கண்டுபிடிப்பதில் அவர் செய்த பங்களிப்புக்காக பிரெஞ்சு வைராலஜிஸ்ட் லூக் மாண்டாக்னியர் நோபல் விருது பெற்றார். COVID-19 இயற்கையாக உருவானதல்ல ஒரு சீன ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கடந்த ஆண்டு முதல் கூறி வருகிறார் மாண்டாக்னியர். இவர் தடுப்பூசிக்கு எதிராகவும் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் கூறியதாக Forwarded Many Times என்ற குறிப்புடன் வரும் வாட்ஸ்அப் மெசேஜ் உடன் கூடவே இதை உண்மை என்று நிரூபிக்க இதை படித்துபாருங்கள் என்று சொல்லி சில லிங்குகளும் இணைக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப்பில் வலம் வரும் குறிப்பிட்ட அந்த மெசேஜில், “தடுப்பூசி போடப்பட்ட அனைவரும் 2 ஆண்டுகளுக்குள் இறந்து விடுவார்கள். நோபல் பரிசு வென்ற விஞ்ஞானியான வைராலஜிஸ்ட் லூக் மாண்டாக்னியர் தொற்றுக்கு எதிராக எந்தவொரு தடுப்பூசியையும் போட்டு கொண்டவர்கள் உயிர்வாழ வாய்ப்பில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே தடுப்பூசி போட்டவர்களை காப்பாற்ற எந்த சிகிச்சையும் இல்லை.

உடல்களை எரிக்க நாம் தயாராக இருக்க வேண்டும். விஞ்ஞான மேதை தடுப்பூசியின் கூறுகளைப் படித்தபின் பிற புகழ்பெற்ற வைராலஜிஸ்டுகளின் கூற்றுக்களை ஆதரித்தார். அவர்கள் அனைவரும் ஆன்டிபாடி சார்ந்த விரிவாக்கத்தால் இறந்துவிடுவார்கள். இதைவிட வேறு எதுவும் சொல்ல முடியாது” என்று மக்களை அச்சுறுத்தும் வகையில் கூறப்பட்டுள்ளது. மேலும் அதில் தடுப்பூசி தான் வைரஸின் மாறுபாடுகளை உருவாக்குகிறது என்பதால், தடுப்பூசி ஒரு அறிவியல் மற்றும் மருத்துவ பிழை, இது ஏற்று கொள்ள முடியாத தவறு என்று அவர் கூறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வைரல் வாட்ஸ்அப் மெசேஜ் குறித்து தனது அதிகாரபூர்வ ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பத்திரிகை தகவல் பணியகம் (PIB – Press Information Bureau) அந்த வாட்ஸ்அப் ஃபார்வர்ட் மெசேஜ் உண்மையில் போலி செய்தி என்று கூறி உள்ளது. தடுப்பூசிகள் குறித்து ஒரு பிரெஞ்சு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியை மேற்கோள் காட்டி ஒரு படம் மற்றும் மெசசேஜ்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. ஆனால் இது ஒரு போலி செய்தி. COVID-19 தடுப்பூசிகள் முற்றிலும் பாதுகாப்பானது. எனவே இந்த செய்தியை யாருக்கும் ஃபார்வர்ட் செய்ய வேண்டாம் என்றும் PIB அறிவுறுத்தி உள்ளது.

COVID-19 Vaccination: கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட வேண்டுமா..? உங்கள் சந்தேகங்களுக்கான மருத்துவரின் விளக்கம்

இந்த போலி செய்தி தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த அசாம் காவல்துறையினர் இதே போன்ற ஒரு பதிவை தங்கள் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டனர். இதனிடையே லுக் மாண்டாக்னியர் தடுப்பூசி எதிர்ப்பு நிலைப்பாட்டிற்கு பெயர் பெற்றவர் என்று கடந்த ஆண்டின் ஒரு அறிக்கையை மேற்கோள் காட்டி ஆல்ட் நியூஸில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் நாவல் கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டதாகவும், எச்.ஐ.வி யிலிருந்து மரபணு பொருள் இருப்பதாகவும் அவர் தவறாக கூறுகிறார் என்று குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க உண்மை சரிபார்ப்பு அமைப்பு ( fact-checking organisation) ஸ்னோப்ஸ் (Snopes) தடுப்பூசி குறித்த வைராலஜிஸ்ட் லூக் மாண்டாக்னியர் கருத்துக்கள் பெரும்பாலான விஞ்ஞானிகளால் பரவலாக மறுக்கப்பட்ட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.நாம் ஒரு புத்தகத்திலிருந்து ஒரு வார்த்தையை எடுத்துக் கொண்டால், அந்த வார்த்தை மற்றொரு புத்தகத்தை ஒத்ததாக இருந்தால், ஒருவர் மற்றொன்றிலிருந்து அதை நகலெடுத்தார் என்று சொல்ல முடியுமா? இது அபத்தமானது என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.