ஆடு அறுக்க முன் ……… அறுக்க முற்படும் அவலம்!! யாழ்ப்பாண மூத்த ஊடகவியலாளர் கூறுவது என்ன??

இன்னும் ஆடு வெட்டேல்லை
கிராமங்களில் கிராமத்தவர்கள் ஆட்டை வெட்டி இறைச்சியை பகுதி பகுதியாக பிரித்து பங்கிட்டு எடுத்துச்சென்று சமைக்கும் வழக்கம் இப்போதும் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது இப்படி ஒரு முறை ஆடு வெட்டும் போது கிடாய் புரோக்கர் ஒருவர் ஆட்டின் முக்கியமான உறுப்பு என்ன விலை என்றாராம் ஆடு வெட்டிக்கொண்டிருந்தவர்கள்தம்பி நீ கேட்கிற பங்கு உனக்குத்தான் நிச்சயம் தருவோம் இன்னும் ஆடு வெட்டேல்லை ஆடு வெட்டிய பிறகு நீ உனக்கு என்ன தேவையோ தேவையானதை எடுத்துக்கொள் என்று சொன்னார்களாம்.
எங்கடை தமிழ் தேசிய அரசியல்வாதிகள் படுற பாட்டைபாத்தா உந்தபொடியனரை ஆட்டுக்கிடாய் கதை தான் எனக்கு ஞாபகத்துக்கு வருது.
ஸ்ரீலங்காவிலை மாகாணசபை எலெக்சன் நடக்கபோகுதாம் அதுக்கு இப்பவே ஆக்களெல்லாரும் வரிஞ்சு கட்டிக்கொண்டு அவருக்கு தகுதியில்லை , இவருக்கு தகுதியில்லை எனக்கு எல்லா தகுதியும் இருக்கு, இன்னும் வேட்பாளரை தீர்மனிக்கேல்லை, மாவை தான் வேட்பாளர், வேலன் சுவாமி தான் பொருத்தமானவர், மணிவண்ணன் பொதுவேட்பாளர் அது இது எண்டு ஆளாளுக்கு அறிக்கை விட்டுக்கொண்டிருக்கினம்.
அது சரி பாருங்கோ உந்த அவருக்கு தகுதியில்லை இவருக்கு தகுதியில்லை அவர் தான் பொருத்தமானவர் இவர் தான் பொருத்தமானவர் எண்டெல்லாம் அறிக்கை விடுற ஆக்கள் வடமாகாண முதலமைச்சரா போட்டி போடுறதுக்கு என்ன தகுதி வேணும் அடிப்படைத்தகைமை, என்ன, முன் அனுபவம் தேவையா எண்ட விசயங்களை ஒருக்கா தங்கடை ஊடகங்கள் மூலம் சனத்துக்கு விளங்கப்படுத்தினா நல்லது.
அய்யா மெத்தப்படித்த கனவான்களே வடமாகாண முதலமைச்சர் பதவி என்ற பதவி ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதா? அப்படியாயின் எத்தனையாவது இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது என்ற விடயத்தை எமது தமிழீழ மக்களுக்கு விளங்கப்படுத்துவீர்களா?
ஸ்ரீலங்கா அரசியல் யாப்பின் 13 வது திருத்தச்சட்டத்தின் கீழ் தான் மாகாணசபை உருவாக்கப்பட்டது என்பது ஊர்ந்து போற சிற்றெறும்புக்கும் தெரியும் அதை நான் சொல்லத்தேவையில்லை. மாகாணசபை முதலமைச்சர் என்ற பதவி பற்றி ஸ்ரீலங்கா அரசியல் யாப்பின் 13 வது திருத்தச்சட்டத்தின் 40 பிரிவு உப அங்கம் நான்கில் .பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
ஆளுநர் அவரது அபிப்பிராயப்படி,அம்மாகாணத்திற்கென அமைக்கப்பட்ட மாகாணசபையின் உறுப்பினர்களுள் பெரும்பான்மையினரின் ஆதரவைப்பெறுவதற்கு இயலுமான அச்சபையின் உறுப்பினரை பிரதான அமைச்சராக நியமித்தல் வேண்டும்.
இதிலை ரண்டு விசயம் இருக்குது பாருங்கோ முதலாவது முதலமைச்சரை ஆளுநர் தான் நியமிப்பார். இரண்டாவது முதலமைச்சர் அரைவாசிக்கு மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவைப்பெற்றிருக்க வேண்டும்.
இப்ப எல்லா கட்சிகளிலும் இரண்டு அணி இருக்கு மாவை அணி சுமந்திரன் அணி, கஜேந்திரகுமார் அணி மணி அணி எண்டு நீங்களே உங்களுக்கை குடுமிப்பிடிச்சண்டையிலை இருக்கிறியள்; ஏற்கனவே விக்கியரை கவிட்டனீங்கள். உள்ளூராட்சி சபைகளில் கூட கன இடத்தில் உட்கட்சி குத்து வெட்டுகளாலை ஆட்சிக்கவிழ்பு நடந்திருக்கு; கடைசியா மாநகரசபையினயும் கவிட்டு போட்டீர்கள். இந்த லட்சணத்திலை அரைவாசிப்பேற்றை ஆதரவோடை முதலமைச்சரை தெரிவு செய்யிறது எவ்வளவு தூரம் சாத்தியம் எண்ட கேள்வி எங்களை அறியாமலே ஏற்படுது.
உந்த ஆட்சிக்கவிழ்ப்புகள் எல்லாம் நீங்கள் சனத்தின்ரை நனமைக்காகத்தான் கவிட்டனீர்கள் எண்டுறது சனத்துக்குத்தெரியும்இந்த முறையும் எத்தினை மாதத்துக்குப்பிறகு மாகாணசபை ஆட்சியை கவிழ்ப்பீர்கள் எண்டுறதை தேர்தல் விஞ்ஞாபனத்திலையே சொல்லிப்போட்டா வோட் போடுற சனத்துக்கு வசதியா இருக்கும் பாருங்கோ. உந்த ஒட்டுக்குழுக்கள் மொட்டுக்கள் ஒருதராலும் எங்கடை தமிழ்-அரசுக்கட்சியினரை ஆட்சியை அசைக்க ஏலாது கவிக்கிறதெண்டாலும் அதுகும் தமிழ்- அரசுக்கட்சியால் தான் முடியும்.
வன்னிச்சனம் எங்கடை வடக்கு மாகாணசபை கலைஞ்ச பிறகு சரியா கஸ்ரப்படுதுகள் மாகாணசபை ஆட்சி நடக்கேக்கை கிளிநொச்சியிலையும் முல்லைத்தீவிலும் பாலாறும் தேனாறும் ஓடியதை உலகமே அறியும் இப்ப சனங்கள் ஒரு நேரச்சாப்பாடுக்கே கஸ்ரப்படுத்துகள். எப்ப மாகாணசபையிலை தமிழரசுக்கட்சியினரை ஆட்சி வரும் என்று வடமாகாண மக்கள் எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் தங்களின்ரை பசியைப்போக்கிறதுக்கு ஏனெண்டா நீங்கள் போன முறை சிங்கள அரசாங்கம் தந்த வாகன பேமிற்றைக்கூட வித்து சனத்துக்குத்தான் செலவு செய்தனீர்கள் எண்டு எல்லாருக்கும் தெரியும் அதோடை Michell Bachllette அம்மையாரும் பாத்துக்கொண்டிருக்கிறா நீங்கள் என்ன தீர்மானம் நிறைவேற்றப்போறீங்கள் எண்டு போன முறை நீங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்திலை சமஷடி எண்டு சொல்லிபோட்டீங்கள் இந்த முறை சில நேரம் நீங்கள் தமிழீழம் தான் முடிஞ்ச முடிவு எண்டு அறிவிச்சா ஐ.நா சபையிலை தீர்மானம் கொண்டு வரப்போறன் எண்டு Micheelle Bachllette அம்மையார்சொல்லியிருக்கிறாவாம் .
எதுக்கும் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கோ சிறிலங்காவினரை ஜனாதிபதி தான் தேர்தல் திகதியை அறிவிக்க வேணுமெண்டுறது உங்களுக்குத்தெரியும் தானே ஆனா படியா கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கோ. அதி உத்தம ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தேர்தல் திகதியை அறிவிக்கும் வரையும்

நன்றி…….

Parameswaran Navaratnam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)