புதினங்களின் சங்கமம்

அண்ணாவிடம் காசு வாங்கினேன்!! தற்கொலைதாரியின் தங்கை அதிர்ச்சி வாக்குமூலம்

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சூத்திரதாரி
சஹ்ரானிடமிருந்து, 20 இலட்சம் ரூபாய் பணம் பெற்றதாக, அவரது சகோதரி மொஹமட்
நியாஸ் மதனியா ஒப்புக்கொண்டுள்ளார்.

பொலிசாரின் விசாரணையில் சஹ்ரானுடன் தொடர்பு இருந்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

சஹ்ரானின் இளைய சகோதரியான 25 வயதுடைய மதனியா, நேற்றுமுன்தினம் காத்தான்குடியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

நேற்றுமுன்தினம் மாலை, மதனியாவின் வீட்டைச் சோதனையிட்டபோது, அங்கிருந்து 20 இலட்சம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டது.

இந்தப் பணம், சஹ்ரானிடமிருந்து கிடைத்திருக்கலாம் என்ற கோணத்தில்
பொலிஸார் விசாரணைகளை நடத்தினர். விசாரணைகளின்போது, அந்த பணம்
சஹ்ரானிடமிருந்துதான் பெற்றுக்கொள்ளப்பட்டது என்பதை மதனியா
ஒப்புக்கொண்டுள்ளார்.

தன்னை கொழும்புக்கு வருமாறு சஹ்ரான் அழைத்ததாகவும், வான் ஒன்றில்
கொழும்புக்குச் சென்று, கல்கிசையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் ஏப்ரல்
12ஆம் திகதியன்று சஹ்ரானைச் சந்தித்தாகவும் மதனியா கூறியுள்ளார்.

இதன்போதே, தேசிய ஜமாஅத் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்டச்
செயற்பாடுகளுக்குப் பயன்படுத்துவதற்காக, 20 இலட்சம் ரூபாயைத் தன்னிடம்
சஹ்ரான் வழங்கியதாகவும் மதனியா கூறியுள்ளார்.

இதேவேளை, அண்மையில் வெளிநாட்டு ஊடகமொன்றுடன் பேசிய மதனியா- தனக்கும்
சஹரானுக்கும் நீண்டகாலமாக தொடர்பு இல்லை என்றும், கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம்
திகதியிலிருந்து தனது குடும்பத்தினர் அனைவரும் காணாமல் போய்விட்டதாகவும்,
சஹ்ரானின் நடவடிக்கைகள் மீது தனது கணவன் வெறுப்படைந்திருந்தார் என்றும்
அதனால், அவருடன் தமக்குத் தொடர்புகள் இல்லை என்றும் தெரிவித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.