புதினங்களின் சங்கமம்

வடமராட்சி கிழக்கில் தொடரும் சட்டவிரோத மணல் கடத்தல்: இன்று மேலும் ஒருவர் கைது! இருவர் பிணையில் விடுவிப்பு!

வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் நடவடிக்கை தொடர்ந்து வரும் நிலையில் இன்றைய தினமும் உழவு இயந்திரத்துடன் ஒருவர் பருத்தித்துறை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுளார்.

வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட நிலையில் அங்கு சென்ற பருத்தித்துறை பொலிசாரினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டு, மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக அருவி இணையத்தின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

வடமராட்சி கிழக்கு பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் கடத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதனை தடுக்கும் வகையில் பருத்தித்துறை பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்தும் தனித்தனியாகவும் விசேட நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் இன்றைய தினம் பருத்தித்துறை பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் உழவு இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் தனது சொந்த உழவு இயந்திரத்தை பயன்படுத்தியே மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், குறித்த நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாகவும் பருத்தித்துறை பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை, நேற்றைய தினம் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டிருந்த போது பருத்தித்துறை பொலிசார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் கைது செய்யப்பட்டிருந்த இருவரையும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்டிருந்தனர்.

இதையடுத்து குறித்த இருவரையும், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு டிப்பர் வாகனங்களையும் தலா ஒரு இலட்சம் ரூபா பிணையில் (நபருக்கு ஐம்பதாயிரம், டிப்பர் வாகனத்திற்கு ஐம்பதாயிரம் ரூபா) விடுவிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.