புதினங்களின் சங்கமம்

சாய்ந்தமருதில் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைக்க இடம் கொடுக்க மாட்டோம்!! உலாமாசபை!!

சாய்ந்தமருது பொலிவேரியன் பகுதியில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு மரணித்த எவருடைய உடல்களையும் தமது பள்ளிவாசல் பொறுப்பேற்காது என்றும் அந்த சடலங்களை தமது பிரதேச மையவாடிகளில் அடக்கம் செய்ய இடமளிக்கப் போவதில்லை எனவும் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் உலமா சபை அறிவித்துள்ளது.

சாய்ந்தமருது வர்த்தக சபை மற்றும் பொதுமக்களுடன் இணைந்து இந்த அறிவித்தலை விடுப்பதாகவும் ஜும்ஆ பள்ளிவாசல் உலமா சபையினர் தெரிவித்துள்ளனர்.

சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் உலமா சபையினர் நடத்திய ஊடக சந்திப்பில் இந்தத் தகவலை வெளியிட்டனர்.

“பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு இப்பிரதேசத்தில் என்றுமில்லாதவாறு அமைதியின்மையை ஏற்படுத்திய நபர்கள் எவரின் உடல்களையும் எமது பள்ளிவாசல் பொறுப்பேற்காது. மேலும், அந்த சடலங்களை இப்பிரதேச மையவாடிகளில் அடக்கம் செய்யவும் இடமளிக்கமாட்டோம்.” என்று அவர்கள் தெரிவித்தனர்.

“ஸியாரம் (புனிதர்களை அடக்கம் செய்த இடம்) அமைந்துள்ள பள்ளிவாசல்களை இலக்கு வைத்து விஷமிகளின் தாக்குதல் நடைபெறலாம் என பொலிஸார் எம்மை எச்சரித்ததற்கு அமைய, நாம் ஸியாரம் அமைந்துள்ள எமதுபள்ளிவாசல்களை பாதுகாக்கும் பல நடவடிக்கைகளை முடுக்கியிருந்தோம்.” என்றனர்.

ஏற்கனவே சுனாமியால் பாதிக்கப்பட்டு தமது உறவுகளையும், சொத்துக்களையும் இழந்து, மீள் குடியேறியுள்ள இம் மக்களை, மீண்டும் துயரத்தில் ஆழ்த்தியிருப்பது மோசமான ஒன்று என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

சாய்ந்தமருது பொலிவேரியன் பகுதியில், தமது வீடுகளிலிருந்து வெளியேறிய அந்தப் பகுதி மக்களில் கணிசமானோர், இன்னும் அவர்களுடைய வீடுகளுக்குத் திரும்பவில்லை. வேறுவழிகளின்றி, வீடு திரும்பியவர்களும் கடும் அச்சத்துடனேயே காணப்படுகின்றனர்.

சாய்ந்தமருது பொலிவேரியன் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் வாடகைக்குத் தங்கியிருந்தவர்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 15 பேர், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தற்கொலைக் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பங்களில் உயிரிழந்தனர்.

அந்த சம்பவம் நடந்த வீட்டினுள்ளும் சுற்றுப்புறங்களிலும் காணப்பட்ட சடலங்கள் தற்போது அகற்றப்பட்டுள்ளன. அங்கு காணப்பட்ட தடயப் பொருட்களை பொலிஸார் எடுத்துச் சென்றுள்ளார்கள். வீட்டின் முன்பாக பொலிஸார் காவலில் உள்ளனர்.

சம்பவம் நடந்த வீட்டின் முன்னாலுள்ள வீதியில், குண்டு வெடிப்பின் போது உடைந்து சிதறிய பொருட்களின் பகுகள் இன்னும் காணப்படுவதையும் அவதானிக்க முடிகிறது.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு மேற்படி பயங்கரவாதச் சம்பவங்கள் நடந்ததை அடுத்து, தமது வீடுகளிலிருந்து வெளியேறிய அந்தப் பகுதி மக்களில் கணிசமானோர், இன்னும் தமது வீடுகளுக்குத் திரும்பவில்லை. வேறு வழிகளின்றி தமது வசிப்பிடங்களுக்குத் திரும்பியதாக சிலர் பிபிசியிடம் கூறினார்கள்.

அதிர்ச்சியும், பயமும் இன்னும் விலகாத நிலையிலேயே அவர்கள் உள்ளனர்.

தமது வாழ்நாளில் இவ்வாறான சம்பவத்தை முதன் முதலாகக் கண்டதாக, அங்குள்ள பலர் கூறுகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர், தனது அடையாள அட்டையை எடுத்துச் செல்லாமலேயே, சாய்ந்தமருதிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வரை, பணித்துத் திரும்பியதாகக் கூறும் இப்பகுதிவாசி ஒருவர், இப்போது அடையாள அட்டை இன்றி வெளியேற முடியாத பாதுகாப்புக் கெடுபிடிகள் ஏற்பட்டுள்ளதாகவும், இவ்வாறான குண்டுவெடிப்பு சம்பவங்களின் பின்னர் தமது சுதந்திரம் பறிபோய் விட்டதாகவும் பிபிசி யிடம் கவலை தெரிவித்தார்.

இதேவேளை, தமது ஊரில் இவ்வாறானதொரு சம்பவம் நடந்துள்ளதால் அங்குள்ள மக்கள் கடுமையான கவலையுடனும், கோபத்துடனும் காணப்படுகின்றனர்.