வட மாகாண கல்வி அதிகாரிகளின் திருவிளையாடலில் சிக்கிப் பலியாகும் ஆசிரியர்கள்!! நடப்பது என்ன?
வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் பல்வேறு குழப்பங்களுடன் நடந்தேறியிருக்கிறது. இந்த இடமாற்றம் EMIS எனப்படும் கல்வி முகாமைத்துவ தகவல் முறைமை தரவுத் தளத்துக்குள்ளால் செயற்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆயினும், இவ்வாறு இடமாற்றம் வழங்கவென அறிவிக்கப்பட்ட பெயர்களைப் பார்த்த பலருக்கும் தலைச்சுற்று ஏற்பட்டது. ஏனெனில், கடந்த காலங்களில் பல்வேறு கஸ்டங்கள் மத்தியில் பல வருடங்கள் வெளிமாவட்டங்களில் கடமையாற்றிய அதிகளவானோரின் பெயர்கள் அதில் வந்திருந்தன. அதேவேளை, ஒரு காலமும் வெளி மாவட்டங்களில் கடமையாற்றாத பல இளம் ஆசிரியர்களின் பெயர்கள் அந்த இடமாற்றப் பட்டியலில் ‘தவற’ விடப்பட்டிருந்தன. தரவுத் தளத்தின் கண்ணில் மண்ணைத் தூவி அவர்கள் இடமாற்றம் பெறாது காப்பாற்றப்பட்டுள்ளனர்.இதன் பின்னால் உள்ள ‘அது’ எதுவோ?
இந்தத் தரவுத் தளம் கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக உள்ளது. அப்போது தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பாடத்துக்கு நியமனம் பெற்ற கல்வி அதிகாரியின் பொறுப்பில், தகவல் தொடர்பாடல் ஆசிரிய வளவாளர்களின் அர்ப்பணிப்பான சேவையினால் இத்தரவுத் தளம் கட்டியெழுப்பப்பட்டு இருந்ததுடன், தரவுகளும் தொடர்ந்து இற்றைப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தன. அரச சம்பளத்துடன் இவர்கள் இப்பணியினை ஆற்றினர்.
இதனைத் தொடர்ந்து, புதிதாக நியமனம் பெற்ற கல்வி அதிகாரி ஒருவர் வெளிமாவட்ட சேவையைத் தவிர்க்கும் வகையில் (அவர் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பாடமல்ல, பொது நிர்வாக ஆளணி), இல்லாத ஆளணியொன்றை உருவாக்கி, அதற்கு நியமிக்கப்பட்டார். இத்தனைக்கும் கல்வி அமைச்சின் செயலாளரது உறவினர் என்ற தகுதியில், அதுவரை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப அதிகாரியிடமிருந்த பொறுப்பு பிடுங்கப்பட்டு, இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
வந்தவர் பழைய தரவுத் தளத்தை முற்றாக நீக்கி, புதிய தரவுத் தளத்தை உருவாக்கப் போகிறேன் எனத் திட்டம் ஒன்றைத் தயாரித்து, யாழ்ப்பாணத்தின் பிரபல பாடசாலையொன்றின் பழைய மாணவர்களால் நடத்தப்படும் ஒரு தன்னார்வ அமைப்பிடம் இருந்து, முப்பது இலட்ச ரூபாவைப் பிடுங்கிக் கொண்டார். இதற்கென இன்னொருவரையும் அமர்த்தி, அவருக்கு சுளையாக சம்பளம் வழங்கி, செலவுகள் காட்டி, இருந்த தளத்தை முற்றாக நீக்கி, புதிய தளத்தை உருவாக்கியதாக கணக்கு காட்டி விடயம் ஒப்பேற்றப்பட்டு விட்டது. ஆனால், பழைய தளத்தில் சில மேம்படுத்தல்களைச் செய்தமை மட்டுமே நடந்ததாக தொடர்புடைய ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். முன்னர், கொடுப்பனவு ஏதுமின்றிச் செய்த வேலைக்கு இப்போது 30 இலட்சம் செலவு. இது தொடர்பில் மாகாண உயரதிகாரி ஒருவர் எழுத்து மூலம் கேள்வி எழுப்பிய போதும் விடயம் அமுக்கப்பட்டு விட்டது. குறித்த அதிகாரியும் ஓய்வு பெற்றுச் சென்று விட்டார். இப்படி ஏய்த்து உருவாக்கிய தரவுத் தளத்தில் இருந்துதான் தவறான பெயர்கள் இடமாற்றத்துக்குப் பட்டியலிடப்பட்டிருக்கிறது.
மாகாண தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழுவில் முக்கிய பங்காற்றும் குறித்த அதிகாரி பரிந்துரைப்பதைத்தான் மாகாண கல்வித் திணைக்களம் கொள்வனவு செய்து, பாடசாலைகளுக்கும், அலுவலகங்களுக்கும் வழங்குகிறது. அதிலும், தனது கைவரிசையை குறித்த அதிகாரி காட்டத் தவறவில்லை. பாடசாலைகளுக்கு வழங்கிய குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி கொள்வனவிலும் ஆகக் கூடிய கூறுவிலைக்குரிய தொகுதிதான் சிபார்சு செய்யப்பட்டதாம். அத்துடன் யாழ்ப்பாணத்தில் உள்ள தனக்கு வேண்டிய நிறுவனம் ஏஜன்டாக உள்ள தரமற்ற போட்டோ பிரதி இயந்திரத்தையே கொள்வனவு செய்யச் சிபார்சு செய்துள்ளாராம் இந்த அதிகாரி.
இவருடன் நியமனம் பெற்ற அதிகாரிகள் கடந்த நான்கு வருடங்களாக வெளிமாவட்டங்களில் கடமையாற்றி வரும் நிலையில், குறித்த அதிகாரி பரமசிவன் கழுத்துப் பாம்பு போல இருந்து நடத்தும் திருவிளையாடல்களை கணக்காய்வு மற்றும் தொழிநுட்பக் கணக்காய்வுக்கு உட்படுத்தப் போகிறவர்கள் யாரோ? எனக் கேள்வி எழுப்புகின்றனர் நேர்மையான அதிகாரிகள் சிலர். தொழிநுட்ப அறிவற்ற மேலதிகாரிகளின் தலையில் சம்பல் இடிக்கும் சம்பவங்களின் முதற் பருக்கை வவுனியா வடக்கு சம்பவம் என்றால், மறு பருக்கை இதுவல்லவோ!

