புதினங்களின் சங்கமம்

கோட்டாவுக்கு அனைத்தும் தெரியுமாம்!! தாக்குதல் தொடர்பாக வெளிப்படுத்தியது யாார்?

சிறிலங்காவில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலைத் தாக்குதல்களை நடத்திய ஐ.எஸ் ஆயுததாரிகள் செயற்படுவது தொடர்பில் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிடமும் தற்போதைய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவிடமும் நேரடியாக முறையிட்டும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் முஸ்லீம் தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

சிறிலங்காவின் பாதுகாப்பு மற்றும் சட்டம் – ஒழுங்கு அமைச்சரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில், சிறிலங்காவில் வாழும் முஸ்லீம்களின் தலைமைப் பீடங்களில் ஒன்றாக இருக்கும் அகில இலங்கை ஜம்யதுல் உலமா சபை இந்த கேள்வியை எழுப்பியிருக்கின்றது.

சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஏப்ரல் 25 ஆம் திகதி சர்வமதத் தலைவர்களுடன் சந்திப்பொன்றை நடத்தினார்.

இந்த சந்திப்பில் முஸ்லீம் மக்களின் சார்பில் கலந்துகொண்ட அகில இலங்கை ஜம்யதுல் உலமா சபை தலைவர் மௌலவி எம்.ஐ.எம். ரிஸ்வி, இந்த பயங்கரவாத இயக்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் தாங்கள் பல தடவைகள் தகவல்களை வழங்கிய போதிலும் அவை தொடர்பில் போதிய கவனம் செலுத்தவில்லை என குற்றம்சாட்டினார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கு இஸ்லாமுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று 2014ஆம் ஆண்டு யூன் 2 ஆம் திகதி இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு நான் கூறியிருந்தேன். அதன்பதிவு அங்கு இருக்கின்றது. அந்த காலப்பகுதியில் நாட்டின் பாதுகாப்புச் செயலாளராக கோட்டாபய ராஜபக்ச இருந்தார். அவரிடம் நான் அனைத்து ஆவணங்களையும் கையளித்தேன். கடும் நடவடிக்கைகளை இந்த விடையம் தொடர்பில் எடுக்குமாறும் கேட்டுக்கொண்டேன். பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் சிறிலங்காவில் இயங்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடைய அனைவரினதும் விபரங்கள் கையளிக்கப்பட்டன. அனைத்து விபரங்களும் அந்த ஆவணங்களில் உள்ளடங்கியிருந்தன. நாம் அதற்கு முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருக்கின்றோம் அவர்களை கைதுசெய்யுங்கள் என்று நாம் கூறினோம்.

ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை. அவர்கள் எதனையும் செய்யவில்லை. 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் திகதி நாம் மூன்று மொழிகளிலும் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தோம். அதில் ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கும் இஸ்லாமுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று மிகத் தெளிவாக அறிவித்திருந்தோம். ஜனாதிபதி பதவிக்கு வந்ததும் நாம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவை சந்தித்தோம். அவரிடமும் அனைத்து ஆவணங்களையும் கையளித்தோம். எனினும் எமது ஜனாதிபதிக்கு ஏப்ரல் 16 ஆம் திகதிவரை இவை குறித்து எதுவும் தெரியாது என்பது தெரிகின்றது’ என்று தெரிவித்தார்.

அத்தோடு, உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவிகளை வழங்குவதற்கும் முஸ்லீம் சமூகம் நடவடிக்கை எடுக்கும் என்றும் சர்வமதத் தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி முன்னிலையில் அகில இலங்கை ஜம்யதுல் உலமா சபை வாக்குறுதி அளித்தது.