புதினங்களின் சங்கமம்

இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு? இராணுவத் தளபதி விளக்கம்!

இன்று நள்ளிரவு முதல் இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாக வெளியாகி வரும் செய்திகள் குறித்து இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா விளக்கமளித்துள்ளார்.

இலங்கையில் கொரோனாத் தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை தினமும் அதிகரித்து வரும் நிலையில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு பொதுமக்கள் அதிகமாக நடமாடுவதை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை முழுவதும் இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இது குறித்து இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா விளக்கமளிக்கையில்,

நாட்டை முடக்குவதற்கான தேவை ஏற்படவில்லை எனவும், குறித்த தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லை என தெரிவித்ததுடன்,

பண்டிகை காலங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு என எந்த வித புதிய திட்டங்களும் இதுவரை வகுக்கப்படவில்லை எனவும் இதுவரை தனிமைப்படுத்தல் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் எனவும் கூறியுள்ளார்.

அரசு தரப்பில் இதுவரை நாட்டை முடக்குவது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்பதை இராணுவத் தளபதி உறுதிபடத் தெரிவித்துள்ளதால் மக்கள் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை கருத்திலெடுக்காது, சுகாதார-பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வரும் பண்டிகை நாட்களை கொண்டாடுவதன் மூலம் எதிர்வரம் நாட்களில் அவ்வாறான இறுக்கமான நிலைக்கு நாட்டை இட்டுச் செல்லாதிருக்க முடியும்.

ஆகவே பொதுமக்கள் சுகாதார-பாதுகாப்பு நடைமுறைகளின் அடிப்படையில்,

கட்டாயம் முகக்கவசங்களை அணிந்து செல்லல்

வெளியிடங்களுக்கு செல்லும் போது கைகளை நன்கு சவர்க்கரமிட்டு அல்லது தொற்று நீக்கிகளை பயன்படுத்தி சுத்தம் செய்வது

சமூக இடைவெளியை பேணுதல்

ஆகிய நடைமுறைகளை பின்பற்றி கொரோனா வைரஸ் தொற்று பரவலில் இருந்து எம்மையும் எமது சமூகத்தையும் பாதுகாப்போம்.