யாழ்ப்பாண மாடுகளின் அறிவை புகழ்ந்து ஆச்சரியப்பட்ட வெள்ளைக்கார பொலிஸ்!!

யாழ்ப்பாண மாடுகளின் அறிவை புகழ்ந்து ஆச்சரியப்பட்ட ‘பொலிஸ் அத்தியட்சகர் (SP) சிட்னி டீ.சொய்சா’.
1950 களில் சிட்னி டீ.சொய்சா யாழ் மாவட்டத்தின் பொலிஸ் அத்தியட்சகராக பணியாற்றியவர், மிகவும் கடுமையானவர். அக்காலத்தில் குதிரையில் பயணம் செய்து கண்காணிப்பில் ஈடுபட்டார். சண்டியர்கள் வீதியில் நின்று அடாவடிகளில் ஈடுபட்டால் குதிரையில் இருந்து கொண்டே குச்சியால் அடித்தார். அவர் குதிரையில் வரும்போது வீதி அமைதியாகிவிடும். இதனை ஓய்வுபெற்ற பல பொலிசார் கூறியுள்ளனர்.
மாட்டு வண்டில்கள் கிடுகுகளை ஏற்றிக்கொண்டு வீதியில் வரும்போது முன்னால் வருபவர்களுக்கு இரவு வெளிச்சம் தெரிவதற்கு அரிக்கன் லாம்பை வண்டிலின் சாரதி கட்டி கீழே தொங்கவிடுவர். அன்று தொட்டு இன்றுவரைக்கும் தென்மராட்சிப்பகுதியிலிருந்தே குடாநாட்டின் ஏனைய இடங்களுக்கு கிடுகுகள் (தென்மராட்சியில் ‘பன்னாங்கு’ என வழக்கிலுள்ளது) கொண்டுவரப்படுகிறது. அப்போது கிடுகு,பனை ஓலை வீடுகளும்,வேலிகளுமே யாழ்ப்பாணத்தில் அதிகம். கொங்கிறீட் சுற்றுமதில்கள் இல்லை. சமையலறை, கிணற்றடி, குப்பைக்கூடு என பல்வேறு தேவைகளுக்கும் கிடுகுகளை பயன்படுத்தினார்கள்.இன்றும் கிடுகுகளின் பாவனை அதிகம்.அதுமட்டுமன்றி தென்னம் மட்டை, தேங்காய் மட்டை (பொச்சு மட்டை),மாட்டெரு போன்றவையும் தென்மராட்சியிலிருந்தே குடாநாட்டின் ஏனைய இடங்களுக்கும் இன்றும் கொண்டுவரப்படுகிறது. பொச்சு மட்டை புகையிலையை வெப்பத்தில் வாட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டதுடன், அடுப்பு எரியூட்டுவதற்கும் உதவுகிறது. இன்று உழவு இயந்திர பெட்டிகளில் தெங்கு பொருட்கள் எடுத்துவரப்படுகிறது.
அப்போது வண்டில் சாரதி வண்டிலின் முன்பக்க இருக்கையிலும், உதவியாளர் கிடுகுக்கு மேற்புறத்திலும் உறங்கிவிடுவார்கள். ஆனால் அந்த வண்டில்கள் தாம் செல்லவேண்டிய பாதையில் வழமைபோல தாமகவே சென்றன. அதிகாலை விடிந்ததும் சேரவேண்டிய இடத்தில் நின்றுவிடும். இரவு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அத்தியட்சகர் சிட்னி சொய்சா இவற்றை அவதானித்துவந்தார்.
ஒருநாள் இரு கிடுகு வண்டில்களை ஒரு சந்தியில் அவர் மறித்து பொலிசாரின் உதவியுடன் இரவு அவற்றின் பாதையை மாற்றிவிட்டார்.என்ன ஆச்சரியம்! அந்த வண்டில்கள் சற்றுத்தூரம் சென்றுவிட்டு அப்பால் போகாது நின்றன.|ஒரு வண்டில் ஒரு இடத்தில் திரும்பி, மீண்டும் தான் செல்லும் இடத்துக்கே வந்ததாம். வேறு ஒரு நாளும் இதேபோலவே அவர் செயற்பட்டார். ஆனால், வண்டில் மாடுகள் தமது விளையாட்டை காட்டின.
இதனை அவர் ஒரு நிகழ்வில் பேசும்போது கூறினார். அந்த மாடுகளுக்குள்ள அறிவை பாராட்டியதுடன், தமிழ் மக்களின் அறிவை அந்த மாடுகள் மூலம் அறியலாம் என்றும் குறிப்பாக தென்மராட்சியை புகழ்ந்தார்.
அந்த மாடுகள் மட்டுமல்ல வடக்கில் பல கிராமங்களில் தோட்டங்கள்,வயல்களில் மேயும் கால்நடைகளை மாலையில் உரிமையாளர் அதன் கட்டை அவிழ்த்துவிட்டால் அவை நேராக தமது வீடுகளை நோக்கி வருவதை இன்றும் காணலாம். அதுமட்டுமா,வீதிகளில் திரியும் மாடுகளும் தமது இருப்பிடங்களுக்கு தாமாகவே வருகின்றன.
பகிர்வு- முகநூல் உறவு

error

Enjoy this blog? Please spread the word :)