மாகாண சபைத் தேர்தல்- அரசாங்கத்திற்குள் இருவேறு கருத்துக்கள்,ஈழக் கோரிக்கைக்கு வழி வகுக்குமென பிக்குகளுக்கு அச்சம்!
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக அரசாங்கத்திற்குள் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. வடக்குக் கிழக்கு உள்ளிட்ட ஒன்பது மாகாண சபைகளுக்குமான தேர்தல் கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக நடத்தப்படவில்லை.
13ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்து மாகாண சபைத் தேர்தல் முறைகளையும் இல்லாமல் செய்ய வேண்டுமென பௌத்த குருமார் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.அதனை ஆராய்ந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தற்போதைக்கு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டிய அவசியம் இல்லையென கூறியிருக்கிறார்.
ஆனால் தேர்தல்களை நடத்த வேண்டுமென அமைச்சர்கள் பலரும் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் வலியுத்தி வருகின்றனர். கோட்டாபய ராஜபக்சவுக்கு நெருக்கான முன்னாள் இராணுவ அதிகாரியான அமைச்சர் சரத் வீரகேசர, மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் இல்லையென ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்த நிலையில் பௌத்தகுருமார் இன்று புதன்கிழமை கோட்டாபய ராஜபக்சவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியதாகவும் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லையெனவும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. மாகாண சபைத் தேர்தல்கள் ஈழக் கோரிக்கைக்கு வழி வகுக்குமெனவும் தேரர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தவில்லையானால் பிரதேச அரசியல்வாதிகள் குழப்பமடைவார்கள் என்றும் இதனால் கட்சி அரசியல் செயற்பாடுகள் பலவீனமடையுமெனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

