புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்தில் கையில் Map உடன் திரியும் ‘கொரோனா’!! பரபரப்பு தகவல் இதோ!!

நான் மருதனாமடம் சந்தியில பெற்றோல் செற்றில நிக்கிறேனாக் கிடக்கு
நாலுபக்கத்து றோட்டாலும் சனங்கள் போறதும் வாறதுமா ஒரே அமளி.
திடீரெண்டு உசிலைமணி கணக்கா ஒரு உருவம் சந்தைக்குள்ளை இருந்து வெளிய வந்திச்சு.
அதுக்குப் பின்னாலை ஆறேழுபேர் “அடே! கொரோனா டா கொரோனாடா!” -எண்டு கத்தியபடியே ஓடி வாறாங்கள்.
நான், பெற்றொல் அடிச்சது பாதி அடிக்காதது பாதிய அப்பிடியே ஆஞ்சநேயர் கோயிலுக்கு முன்னாலை போய் யாழ்ப்பாணப் பக்கமா எடுத்தன் ஓட்டம்.
அப்பிடி ஒரு ஓட்டம் நான் மோட்டச்சைக்கிள் எடுத்ததுக்கு இதுவரைக்கும் ஓடேல்லை.
நான் ஓட… அந்த குண்டுக் கொரொனா எனக்குப் பின்னாலை என்னைத்தான் கலைச்சுக் கொண்டு வருகுது.
கொஞ்சத் தூரம் போனதும் என்ர மோட்டச்சைக்கிள் பறக்க வெளிக்கிட்டுட்டுது. நான் மேலால போக கீழ றோட்டால அந்த உசிலைமணி குண்டுக் கொரோனா வாறது தெரியுது.
அப்படியே KKS றோட்டால ஓடிப்போறன். தாவடிச் சந்தி வந்திட்டுது. அந்தச் சந்தியில பாத்தா … ‘ரை’கட்டினபடி அதிகாரிகள் மாதிரி கொஞ்சப்பேர் நிக்கினமாக் கிடக்கு. அவைக்குப் பயந்தோ என்னவோ அதிலையே நிண்டிட்டுது கொரோனா.
என்ர மோட்டச்சைக்கிள் இப்ப கீழ இறங்கி றோட்டு மட்டத்துக்கு வந்திட்டுது.
KKS வீதியால வந்த கொரோனா தாவடிச் சந்திவரைக்கும் வந்து அதுக்கிஞ்சாலை வரமுடியேல்லை. ஏதோ ஒரு சக்தி அதை கட்டுப்படுத்தி இருக்கவேணும் போல.
அந்தச் சந்தியில நிண்டுகொண்டு
கெக்கட்டம் போட்டுச் சிரிக்குது சிரிக்குது கொரோனா.
என்னா ஒரு சத்தம்.
இப்பிடி ஒரு சிரிப்பை நான் இதுவரைக்கும் எங்கையும் காணேல்லை.கேக்கவும் இல்லை.
பிறகு…
அதின்ர கையில பாத்தா… சரியா பதினைஞ்சு map வைச்சுக்கொண்டு இருக்குது.
தாவடிச் சந்தியில தான் கொண்டுவந்த விக்கட் ஸ்ரம்ப் மாதிரி ஒரு தடியால றோட்டுக்குக் குறுக்கால அந்த map ஐ பாத்துக் கீறக் கீற அதுக்குள்ளால வெள்ளைப் பெயின்ற் மாதிரி வந்து கோடாகிக்கொண்டே வந்ததிச்சு.
அந்த கோட்டுக்கு வடக்குப் பக்கமா KKS றோட்டில நிண்டுகொண்டு
பெரிய சத்தமா கத்திச் சொல்லிச்சு
“இதுக்கு அங்கால நானும் வரமாட்டன் நீங்களும் வரப்பபடாது!” எண்டு
“அப்பாடா! எனக்கு பெரிய நிம்மதி. இனி என்னைக் கலைக்காது. ஏனென்டா நான்தான் தாவடிச் சந்திக்கு இஞ்சாலை வந்திட்டனே!”
அதே நேரம் ‘கியோ கியோ’ எண்டு மாநகரசபை தீயணைப்பு வண்டி மாதிரி ஒரு சத்தம்!
கொக்குவில் பக்கத்தில இருந்து ஒரு மூடின கன்ரர் வான் வருது. அந்தச் சத்தம்தான் அது. அதன் இரு பக்கத் தட்டியிலயும் ‘சேர்வ் எக்ஸல்’ எண்டு எழுதியிருந்தது.

No photo description available.
அது வந்ததும் அதைக்குள்ள இருந்து கால் கை முளைச்ச கால்கிலோ ‘சேர்வ் எக்ஸல்’ பைக்கற்றுக்கள் திமு திமு எண்டு குதிச்சு வந்து தாவடிச் சந்தியில நிண்ட கொரோனாவை சுத்தி வளைச்சு விழுத்த, கொரோனாவும் விட்ட பாடா இல்லை. திமிறித் திமிறி எழும்பப் பாக்குது.
அந்தக் கால்கிலோ பைக்கற்றுக்களால் சமாளிக்க முடியாமல் போக… முன்சீற்றிலை இவளத்தையும் பாத்துக்கொண்டிருந்த திடகாத்திரமான கைகால் முளைச்ச ஒருகிலோ பைக்கற்று குதிச்சு வந்திச்சு.
உண்மையில என்ன ஒரு ஆஜானுபாகுவான தோற்றம்.
ஒரு கிலோ எண்டால் சும்மாவோ? அதின்ர முதுகில கொரோனாவுக்கு எதிராக 99.9 எண்டு எழுதி இருந்தது.
நான் யோசிச்சன் 99.9 எண்டா இனி கொரோனா தப்பேலா. துலைஞ்சுது கொரோனா எண்டு. எனக்கும் புது தெம்பு பிறந்திட்டுது.
விழுந்து கிடந்த கொரோனாவுக்கு ஒருகிலோ சைர்வ் எக்ஸல் விட்டிச்சுது ஒரு குத்து.
அம்மா செத்தேன் எண்டு கதறிச்சு கொரோனா.
இன்னும் சரமாரியான குத்துக்கள். சேர்வ் எக்ஸலிடமிருந்து…
ஊரை மட்டுமல்ல உலகத்தையே கலக்கிக்கொண்டு இவ்வளவு அழிச்சாட்டியம் பண்ணுற கொரோனாவைப்பாத்து எனக்கும் ஆத்திரம் வராதோ பின்னை
எனக்கும் சரியான ஆத்திரம். அதோட கொஞ்சம் தைரியமும் வந்திட்டுது.
“குத்து! குத்து!
அப்பிடித்தான்! அப்பிடித்தான்!
விடாதை! விடாதை!
கொரோனாவை தப்ப விடாதை!”
இப்பிடி நானும் சேர்ந்து கத்தினது மட்டுமில்லை.
விரலை மடிச்சு நானும் விட்டன் குத்து. கையால அதுக்கு குத்தக் குத்த எனது கை சரியா நொந்து. அதுக்குமேல நோ தாங்கமுடியாமல் நான் அப்பிடியே அந்தச் சந்தியில இருந்த தேத்தண்ணிக் கடை வாசலில இருந்திட்டன்.
“அப்பா! அப்பா!”
என்ர தோளைத் தட்டியபடி தேத்தண்ணிக் கப் போடை வந்து எழுப்பிய என் மகள் …,
“சும்மா இரவில கண்ட கண்ட நேரமெல்லாம் நித்திரை முழிக்கிறது பிறகு பகல் நேரத்தில நித்திரை கொண்டு கனவு காணுறது. ஆறுமணிக்கு எனக்கு மற்ஸ் கிளாஸ் இருக்கு கெதியா கொண்டுபோய் விடுங்கோ” -என்று கடிந்து கொண்டாள்.
அப்போதான் கண்முழித்து நான் படுத்திருந்த சாய்மணைக் கதிரைக்கு முன்னால் சுவரில் மாட்டியிருந்த மணிக்கூட்டைப் பார்த்தேன். மணி மாலை 5.35
அட நாசமறுப்பே!
சாய்மனைக் கதிரையின்ர வலது பக்கச் சட்டத்துக்குத்தான் கொரோனா எண்டு கையைப் பொத்திப் பிடிச்சுக்கொண்டு குத்தியிருக்கிறன்.