Vampan memesபுதினங்களின் சங்கமம்

நாவல் பழமும் யாழ்ப்பாண நாதாரிகளும்!!

வாசித்த நாள்முதல் நெஞ்சை அரித்துக் கொண்டிருக்கும் ஒரு பதிவு இது. வைதேகி நரேந்திரனுக்கும் எனக்கும் பொதுவான நண்பர்கள் இதை வாசித்திருக்கலாம். மற்றவர்களுக்காக இதைத் திரும்பவும் பதிகிறேன், எனது மொழியில். அந்த இடத்தின் பெயர் தெரியும், ஆனாலும் அது முக்கியமில்லை.
ஏ9 வீதியில் இருக்கிறது அந்த ஊர். கீழே இறங்கி நடந்தால் ஏராளம் நாவல் மரங்கள். சுற்றிப் பார்த்தால் திசையெங்கும் நாவல் மரங்கள். நாவற்பழங்கள் காலில் மிதிபடும். விதைகளும்தான். ஒவ்வொரு மரத்தின் கீழும் கிடக்கும் எண்ணற்ற பழங்களையும் விதைகளையும் தொடுவாரில்லை. யாருக்கும் அதுபற்றிக் கவலையில்லை. இத்தனைக்கும் அந்த ஊர் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள மக்களால் நிறைந்தது. கிட்டத்தட்ட எல்லோரும் சமுர்த்தி உதவி பெறுவோர்.
“மற்ற இடங்களில் ஒரு சுண்டு நாவற்பழம் 50 – 100 ரூபாய் வரை/ ஒரு கிலோ 350/= வரை விற்பனை செய்யப்படுகின்றது. கிராமத்தில் உள்ள எவரேனும் பழங்களைப் பறித்து ஏ9 வீதியின் ஓரத்தில் வைத்து விற்பதாக இல்லை. ஏனென்றால் ‘தாங்கள்’ அப்பிடிச் செய்வதில்லை என்று கூறுகின்றார்கள். சரி ரோட்டில வச்சுப் பழம் விற்க வெட்கம்/ மரியாதை குறைவு என்றால் கீழே விழுந்து கிடக்கும் நாவல் விதைகளைப் பொறுக்கி நாவல் விதைப் பானம் தயாரிப்பவர்கள் கிலோ 40/= க்கு எடுப்பார்கள்.. ஒரு நாளைக்கு ஒரு கடகம் பொறுக்கலாமே… 500/= மேல் விற்கலாமே என்றாலும் பதில் இல்லை. ஒரு நாளைக்கு 500 – 1000 ரூபா வரை நாவல் சீசன் முடியும் வரை காசு பார்க்கலாம்.
அந்தக்காசில் வீட்டுப் பிள்ளைகளுக்கு வரும் வருடத்துக்கான சப்பாத்து, புத்தகப் பை வாங்கலாமே. ஒவ்வொரு வருடமும் நாவல் காய்க்கும் தானே என்றால் பதிலில்லை. அசட்டுச் சிரிப்பு மட்டும் தான். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. ஒரு கடிதம் எழுதி `ஜீஎஸ்` சிபாரிசு செய்தால் சப்பாத்தும் புத்தகப்பையும் கொடுக்க எத்தனை நிறுவனங்கள்/ தனிநபர்கள் இருப்பார்கள். அதை விட்டுட்டு ‘நாப்பழ யாவாரம்’ செய்யிறதோ? ” என்றெழுதுகிறார் வைதேகி.
புத்தளத்தில் இருந்து வந்த `யாரோ` இங்கே நாவற்பழம் பிடுங்கி 18,000 ரூபாய்க்கு விற்றிருக்கிறார்களாம் என்று அந்த ஊரிற் சொல்கிறார்களாம். நாவற்பழமும், அதன் விதைகளும் மருத்துவ குணம் மிக்கவை. அதன் உண்மையான பெறுமதியும் அதிகம். பொடியாக்கப்பட்ட விதைகளின் விலை வெளிநாடுகளில் மிக அதிகம். இவர்கள் நாவல் மரத்தையே கண்டிருக்க மாட்டார்கள்.
யோசித்தால் மிக்க துயரமாய் இருக்கிறது. இயற்கை எமக்கு எத்தனையோ கொடைகளைத் தந்திருக்கிறது. எம்மவர்கள் ஒருபுறம் நாவல் மரத்தை வெட்டுகிறார்கள்., மறுபுறம், இருக்கும் நாவல் மரத்தின் இனிய பழங்களைப் பயன்படுத்த விருப்பமற்றிருக்கிறார்கள். அதைக் காசாக்கும் விருப்பமும் அற்றுப்போய் இருக்கிறார்கள். இலவசக் கொடுப்பனவுகட்குக் கையேந்தும் சமூகமாக எம்மைத் தொடர்ந்தும் வைத்திருக்க `யாரோ` விரும்புகிறார்கள். நாம் அதற்கு உடன்பட்டுப் போகிறோம். எங்களுக்கு வாய்த்த அரசியல்வாதிகட்கும் இதுபற்றிச் சிந்தனையில்லை.
யாரோடு நோவோம்? யார்க்கெடுத்துரைப்போம்?
நன்றி