சித்ராவின் தற்கொலை பின்னணி: விசாரணையில் வெளியான முழுமையான பின்னணி!
நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் நடத்திய
விசாரணையில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.
சித்ரா என்ற சாதாரண பெண், சின்னத்திரை நட்சத்திரமாக உயர்ந்து குடும்பத்திற்காக
மெழுகுவர்த்தியாக வாழ்க்கையை முடித்துக் கொண்ட பின்னணி குறித்து தகவல்கள் இவை.
சித்து என்று சின்னத்திரை உலகில் அழைக்கப்பட்டாலும் முல்லை என்றால் தான் சித்ராவை,
கிராமப்புறத்தில் உள்ளோருக்கும் தெரியும்.
அந்த அளவுக்கு தங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணாக முல்லையை நேசித்தனர் சீரியல் பிரியர்கள்.
சித்ராவின் மரணம் தற்கொலை என காவல்துறை அறிவித்த நிலையில், அவரது கணவர் ஹேம்நாத், தாய்
தந்தை, சக நடிகர்கள் என பலரிடம் விசாரித்த போலீசார், சித்ராவின் தற்கொலைக்கான காரணம் என
சிலவற்றை சுட்டிக்காட்டுகின்றனர்.
சாதாரண பெண்ணாக இருந்து தொலைக்காட்சி தொகுப்பாளினியாக நுழைந்து தொலைக்காட்சி தொடரில்
முல்லையாக தோன்றியது முதல் புகழின் உச்சிக்கு சென்ற சித்ராவுக்கு, வருமானமும்
உயரத்தொடங்கியுள்ளது.
தினமும் 20 மணி நேரம் வரை சிரித்த முகத்துடன் வேலை செய்யும் சுறு சுறுப்பானவர் சித்து
என்கின்றனர் அவருடன் பணியாற்றிய சக நடிகர், நடிகையர்.
சீரியலில் நடிக்க அவருக்கு அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை
வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், விளம்பரதாரர் நிகழ்ச்சி, கல்லூரி மற்றும் கடை
திறப்பு விழாக்கள் என இரவு பகல் பாராது தன்னுடைய நிகழ்ச்சிகளுக்காக உள்ளூர்
மட்டுமில்லாமல், திரைகடல் ஓடியெல்லாம் லட்சங்களை சம்பாதித்துள்ளார். அந்தவகையில் அவர்
குறுகிய காலத்தில் 15 க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு சென்று வந்திருப்பது, அவரது
பாஸ்போர்ட் மூலமாக தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.
தான் புகழ் பெற்ற நடிகையாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் தன்னை பின்தொடரும் ரசிகர்களின்
பிறந்த நாளுக்கு கூட நேரடியாக சென்று வாழ்த்து கூறி அசத்தியுள்ளார் சித்ரா.
இதனால் அதிக ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார்.
தன்னுடைய தாய் தந்தையை கவனிக்க சித்ரா ஒரு போதும் தவறியதில்லை என்றும், தனக்கு முதன்
முதலாக உதவிய இயக்குனர் ஒருவருடன் நடைபெற இருந்த திருமணம் பாதியில் நின்றாலும்,
தனது பெற்றோரின் 60 வது திருமண நாளை தங்கள் பகுதி காவல்துறையினரையெல்லாம் வரவழைத்து
வெகுவிமரிசையாக கொண்டாடி மகிழ்ந்ததாக சுட்டிக்காட்டுகின்றனர்.
பம்பரம் போல சுழன்று புன்னகையை வீசி பணம் சம்பாதித்தாலும் அதனை பார்ட்டி, பஃப் என்று
வீணாக்காமல் தனது பெற்றோருடன் இருக்க சொந்தமாக பங்களா வீடு ஒன்றை கட்டியுள்ளார் சித்ரா.
இதன் இறுதி கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் ஆடி கார் ஒன்றையும்
விலைக்கு வாங்கியுள்ளார் சித்ரா.
அன்றில் இருந்து தான் ஆரம்பித்துள்ளது அவருக்கான மனநெருக்கடி என்று கூறுகின்றனர்.
வீடுகட்டவும், காருக்கான தவணை தொகை செலுத்தவும் அவருக்கு பணத்தேவை அதிகரித்த நிலையில்
சீரியல் தொடங்கி கலை நிகழ்ச்சி வரை அனைத்தும் கொரோனாவால் முடங்கியது. சேமிப்பு பணத்தை
வைத்தும் தனக்கு தெரிந்த முக்கிய பிரமுகர்கள் மூலமும் நிலைமையை சமாளித்து வந்துள்ளார்
சித்ரா.
இதற்கிடையே ரியல் எஸ்டேட் புரோக்கர் என்று அறிமுகமான ஹேம்நாத்தை நம்பி காதலில்
விழுந்துள்ளார் சித்ரா. தன்னுடைய சக நடிகர்களிடம் அவரை தொழில் அதிபர் என்று
அறிமுகப்படுத்திய நிலையில் ஹேம்நாத்துக்கு ஏராளமான பெண் தோழிகள் உண்டு என்றும் அவர்
பஃபும், மப்புமாக சுற்றியவர் என பலரும் எச்சரித்துள்ளனர்.
சித்ராவுடன் படப்பிடிப்புக்கு சென்றால் ஆரம்பத்தில் 4 மணி நேரம் வரை காருக்குள்ளேயே
காத்திருக்கும் அளவுக்கு பொறுமைசாலியான ஹேம்நாத் மீது சித்ராவுக்கு காதல்
அதிகரித்துள்ளது. இருவருக்கும் இடையே கடந்த ஓகஸ்ட் மாதம் 24ஆம் திகதி நிச்சயதார்த்தம்
நடத்தியுள்ளனர்.
இருவரும் திருமணத்துக்கு முன்பாக தனியாக காதல் சுற்றுலா சென்று வந்துள்ளனர்.
இதற்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், ஹேம் நாத்தின் நடத்தை தெரியவந்ததால் இரவு
பகலாக மகள் சம்பாதிக்கும் பணம் ஹேம் நாத்துக்கு செலவழிக்கப்படுவதை சித்ராவின் தாய்
விரும்பவில்லை என்று கூறப்படுகின்றது.
இதனால் கடந்த ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி இருவரும் வீட்டிற்கு தெரியாமல் பதிவு திருமணம்
செய்து கொண்டனர். பிப்ரவரி மாதம் நடக்க இருந்த திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட
நிலையில் ஒரு கட்டத்தில் அதனை நிறுத்த தாய் முயன்றதாகவும் கூறப்படுகின்றது.
சித்ராவிடம் வருமானம் தொடர்பாக அவரது தாய் கணக்கு கேட்டதாலும், ஹேம்நாத் குறித்து
கடுமையாக விமர்சித்ததாலும் ஏற்பட்ட மன உளைச்சலால், வீட்டிற்கு செல்வதை தவிர்த்து ஈ.வி.பி
பிலிம் சிட்டிக்கு அருகில் உள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார் சித்ரா.
சம்பவத்தன்று படப்பிடிப்பு முடிந்து 2 மணிக்கு ஓட்டல் அறைக்கு திரும்பிய நிலையில் போதிய
தூக்கம் இன்றி மன அழுத்தத்தில் தவித்த சித்ராவிடம் ஹேம்நாத்தை பிரிந்து விடுமாறு அவரது
தாய் செல்போனில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஏற்கனவே ஒரு முறை தனது திருமணம் நின்று போன நிலையில், இரண்டாவது முறையும் தனது
திருமணம் நின்று போனால் என்ன செய்வது என்ற குழப்பமும், பரிதவிப்பும் அவருக்கு கடுமையான
மன அழுத்தத்தை கொடுத்த நிலையில் சில தனிப்பட்ட விவகாரங்களாலும் சித்ரா இந்த சோகமான
முடிவை தேடிக் கொண்டிருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகின்றனர்.
மொத்த குடும்பத்திற்கும் மெழுகுவர்த்தியாக இருந்து ஒளிகொடுத்துக் கொண்டிருந்த முல்லை என்ற
தீபம் எதிர்காற்றாய் வீசிய மன நெருக்கடிகளால் நிரந்தரமாய் அணைக்கப்பட்டுள்ளது.