புதினங்களின் சங்கமம்

சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழுவின் அடுத்த இலக்கு இதுதான்!!

உருவ வழிபாடு கொண்ட பள்ளிவாசல்களெனக் கருதப்படும் “குப்பு” பள்ளி மற்றும் “அவுலியா” மஸ்ஜித்துகள் மீது, மத அடிப்படைவாத அமைப்புகள் தாக்குதல்களை நடத்தப்படலாமென, பாதுகாப்புத் தரப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இது தொடர்பில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, அறிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் பதிவாகியுள்ள குண்டு வெடிப்புகள் தொடர்பாக, தமது கொள்கைக்கு மாற்றான கொள்கைகளையுடைய பள்ளிவாசல்களை இலக்கு வைத்து, மொஹமட் காசிம் சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு திட்டமிட்டுள்ளதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, இன்று வெள்ளிக்கிழமை புனித ஜும்ஆ தினத்தன்று, பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் ஒன்றுகூடும் வேளையில், பாதுகாப்பு குறித்து கூடிய அவதானம் செலுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.

இதனிடையே, குப்பு மற்றும் அவிலியா பள்ளிவாசல்கள் அவர்களது இலக்காக உள்ளதாகத் தமக்கு மிக நம்பிக்கையான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதனால், பள்ளிவாசல்களின் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் அந்த கடிதத்தின் ஊடாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தெரியப்படுத்தியுள்ளார்.

குப்பு அல்லது அவிலியா பள்ளிவாசல்கள் என்பது, முஸ்லிம் சமய பெரியார்களின் அடக்கஸ்தலங்கள் உள்ள பள்ளிவாசல்கள் என அதில் குறிப்பிட்டுக் கூறப்பட்டுள்ள நிலையில், பிரபுக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரி, பொலிஸ் மா அதிபரின் அலுவலகப் பிரதான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி, அக்கடிதத்தை பொலிஸ் உயரதிகாரிகளுக்கு நேற்று அனுப்பி வைத்துள்ளார்.

அந்த தகவல்களின் பிரகாரம், விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க, அனைத்துப் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகளையும் தெளிவுபடுத்தியுள்ளதாக, பொலிஸ் தலமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.