புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இலங்கையில் நேற்றும் எட்டு பேரை பலியெடுத்தது கொரோனா: மொத்த தொற்று 22501 ஆக அதிகரித்தது!

இலங்கையில் கொரோனத் தொற்று காரணமாக நேற்றைய தினம் (நவ-27) எட்டு மரணங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் 473 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு தொற்று உறுதியானவர்களில் 472 பேர் மினுவாங்கொட-பேலியகொட இரட்டைக் கொத்தணியுடன் தொடர்புபட்டு கொரோனா தொற்று உறுதியானவர்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களாவர்.

இவர்களுடன் கடல் பாதுகாப்பு பணியாளர் ஒருவருக்கும் நேற்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மினுவாங்கொட-பேலியகொட இரட்டைக் கொத்தணியுடன் தொடர்புபட்டு கொரோனா 3வது அலைக்கு தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்து 962 ஆக அதிகரித்துள்ளது.

இதன்மூலம் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை 22 ஆயிரத்து 501 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாத் தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் நேற்றைய தினம் 410 பேர் குணமடைந்து வெளியேறியதை அடுத்து இதுவரை 16 ஆயிரத்து 226 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

இதன் காரணமாக தற்போது இலங்கையில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 6168 ஆக உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக நேற்றும் எட்டு பேர் மரணமாகியுள்ளார். இதையடுத்து கொரோனா வைரஸ் 3வது அலை தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை இலங்கையில் இதுவரை கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை 22501 தொற்றுகளுடன் உலகளாவிய கொரோனா தொற்று பதிவான நாடுகள் வரிசையில் இலங்கை 98வது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.