யாழில் 2 அப்பாவிகளைக் கொலை செய்த ஆமிக்காரர்களுக்கு எதிராக மேல்நீதிமன்றில் குற்றப்பத்திரிகை!!
சிறுப்பிட்டி இளைஞர்கள் இருவர் இராணுவ முகாமுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை
செய்யப்பட்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவத்தினர் ஐவருக்கும் எதிராக மேல்
நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு யாழ்ப்பாணம்
நீதிவான் நீதிமன்றம் பரிந்துரைத்தது.
“வழக்கின் எதிரிகள் ஐவருக்கும் எதிராக சுருக்கமுறையற்ற விசாரணையில் முன்வைக்கப்பட்ட
சாட்சிகளில் நீதிமன்று திருப்தியடைகின்றது. அதனால் எதிரிகளுக்கு எதிரான ஆள்கடத்தல்
மற்றும் கொலைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மன்று கட்டளையிடுகின்றது.
சுருக்கமுறையற்ற விசாரணைகளின் வழக்கேடு மற்றும் வழக்குடன் தொடர்புடைய சான்றுப்பொருள்கள் இருப்பின் அவற்றையும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பாரப்படுத்தவும் மன்று உத்தரவிடுகின்றது.
மேல் நீதிமன்றில் எதிரிகள் ஐவருக்கு எதிராகவும் உரிய குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய
சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு மன்று பரிந்துரைக்கின்றது.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றிலிருந்து அழைப்புக் கட்டளை வரும் போது எதிரிகள் ஐவரும் அந்த
மன்றில் முற்படவேண்டும். அதுவரை எதிரிகளுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றக் கட்டளையின்
பிரகாரம் ஏற்கனவே வழங்கப்பட்ட பிணையில் இந்த மன்று அவர்களை விடுவிக்கின்றது” என்று
யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் சுருக்கமுறையற்ற விசாரணையின் கட்டளையை வழங்கினார்.
யாழ்ப்பாணம் சிறுப்பிட்டிப் பகுதியில் இளைஞர்கள் இருவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தினரின் வழக்கு நேற்று புதன்கிழமை யாழ்ப்பாண நீதிமன்றில் நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் சுருக்கமுறையற்ற விசாரணையின் இறுதிக் கட்டளைக்கு எடுக்கப்பட்டது.
இதன்போது மன்றில் சந்தேகநபர்களான 5 இராணுவத்தினரும் முன்னிலையாகினர். வழக்கின் 3ஆவது சந்தேகநபரான இராணுவச் சிப்பாய் உயிரிழந்துவிட்டார்.
பின்னணி
1997ஆம் ஆண்டு ஒக்டோபர் 28ஆம் திகதி இளைஞர்கள் இருவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இதனுடன் தொடர்புபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட 16 இராணுவத்தினரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்தனர்.எனினும் 1998 ஆம் ஆண்டு நீதிவான் நீதிமன்றம் குறித்த நபர்களுக்கு பிணை
வழங்கியது.இதனைத்தொடர்ந்து கிடப்பில் போடப்பட்ட வழக்கு 2016ஆம் சட்டமா அதிபரால்
விசாரணைக்கு கொண்டுவரப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட 16 இராணுவத்தினரில் இருவர் போரில் உயிரிழந்தனர். இந்த நிலையில் 14
இராணுவத்தினர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.எனினும் அவர்களில் 9 பேரை வழக்கிலிருந்து விடுவிக்க சட்ட மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கினார்.
ஏனைய 5 சந்தேகநபர்களுக்கும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் பிணை வழங்கியது.இந்தச் சம்பவம் தொடர்பில் 1997ஆம் ஆண்டே விசாரணைகளை மேற்கொண்டிருந்த இராணுவப் பொலிஸார், கொல்லப்பட்ட இளைஞர்களில் ஒருவரின் சங்கிலி மற்றும் கைக்கடிகாரம் என்பவற்றை முகாமுக்குள் இருந்து
மீட்டிருந்தனர்.
இதேவேளை, இந்த வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணையின் போது, “சிறுப்பிட்டி
படைமுகாமுக்குள் இளைஞர்கள் இருவரையும் இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். அதனை என் கண்களால் கண்டேன். சிறிது நேரம் அந்த இடத்தில் நின்று பார்த்தேன். எனினும் இளைஞர்கள்
இருவரும் வெளியே வரவில்லை” என்று பெண் ஒருவர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம்
சாட்சியமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.