புதினங்களின் சங்கமம்

இலங்கையில் மிகப் பெரிய கோடீஸ்வரனின் மகன்கள் தற்கொலை குண்டுதாரிகளாக மாறியது ஏன்?? அதிர்ச்சியில் முஸ்லீம் சமூகம்!!

இலங்கை குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்களில் இரண்டு பேர் இலங்கையின் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் பெரிய அரசியல் பின்புலம் உள்ள குடும்பம் ஒன்றை சேர்ந்த இரண்டு பேர் இந்த குண்டுவெடிப்பிற்கு காரணமாக இருந்துள்ளனர்.

கடந்த ஈஸ்டர் அன்று இலங்கையில் 8 வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்தது. இந்த வெடிகுண்டு தாக்குதல்தான் இலங்கையில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் ஆகும்.

3 தேவாலயங்கள் உட்பட 9 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 350க்கும் அதிகமானோர் பலியானார்கள். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு தீவிரவாதிகளின் அடையாளங்கள் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை காலை வரை முகமது யூசுப் இப்ராஹிமின் வாழ்க்கை சரியாகத்தான் சென்று கொண்டு இருந்தது. இலங்கையின் மிக முக்கிய தொழிலதிபர்களில் ஒருவர்தான் யூசுப் இப்ராஹிம். அங்கு மிகப்பெரிய மிளகாய் தூள் உட்பட பல உணவு சாதன பொருட்கள் விற்கும் தொழிலை செய்து வருகிறார். இலங்கையில் மிகவும் பணக்காரரான இவர் தற்போது ஜனதா விமுக்தி பேராமனு கட்சியிலும் முக்கிய உறுப்பினராக உள்ளார்.

இவர் இன்னும் சில நாட்களில் இலங்கையில் அமைச்சராக பொறுப்பேற்க போகிறார் என்றும் கூட தகவல்கள் வந்தது. இவர் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு மிகவும் நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் இவரின் மகன்களால் இவரின் வாழ்க்கையே மொத்தமாக மாறியுள்ளது. இவருக்கு இன்சாப் அஹமது இப்ராஹிம் மற்றும் இல்ஹாம் அஹமது இப்ராஹிம் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் ஈஸ்டர் அன்று முதுகில் பெரிய பையுடன் வெளியே சென்று இருக்கிறார்கள். ஆனால் அன்று மாலை அவர்கள் வீடு திரும்பவில்லை. இலங்கையில் குண்டுவெடித்த 8 இடங்களில் சின்னமன் ஹோட்டலும் , ஷங்கிரி லா ஹோட்டலும் ஒன்று. இந்த இரண்டிலும் வெடிகுண்டு வைத்தது இன்சாப் மற்றும் இல்ஹாம்தான் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் தங்கள் முதுகில் இருந்த பையில் குண்டை கட்டிக்கொண்டு அந்த இரண்டு ஹோட்டலுக்குள் சென்று வெடிக்க வைத்து இருக்கிறார்கள். இதில் கவனிக்க வேண்டியது இருவரும் ஒரே நேரத்தில் இந்த குண்டுகளை வெடிக்க வைத்து இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடயவியல் அறிஞர்கள் செய்த சோதனையின் அடிப்படையில் இவர்கள் இருவரும்தான் குண்டை கட்டிக்கொண்டு வந்து வெடிக்க வைத்து இருக்கிறார்கள் என்று உறுதியாக கூறி உள்ளனர். இதையடுத்து ராணுவம் நேற்று இவர்களின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தியது. அதில் அவர்களின் வீட்டு மாடியில் பூட்டப்பட்ட அறையில் வெடிகுண்டு தயாரிக்க தேவையான பொருட்கள் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது இதுகுறித்து பொலிசார் யூசுப் இப்ராஹிமிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவரின் இன்னொரு மகனிடமும் பொலிசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இவர்கள் எப்படி ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார்கள். இதற்கு பின் பல மர்மங்கள் மறைந்து இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.