இந்தியச் செய்திகள்புதினங்களின் சங்கமம்

முரளிதரனின் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி!

பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியதுடன் திரைவாழ்வில் என்றும் இல்லாத நெருக்கடியையும் ஏற்படுத்திய முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலகிக் கொள்கிறார்.

ஈழ விடுதலைப் போராட்டம் குறித்தும், முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நாள் குறித்தும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் குறித்தும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் கடந்த காலங்களில் தெரிவித்த கருத்துகளை அடிப்படையாக கொண்டு அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் பல்வேறு தரப்பில் இருந்து கிளம்பியது.

தமிழ்நாடு, தாயகம் மற்றும் புலம் பெயர் தளங்களில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் வெளிப்பட்டுவந்த நிலையில் குறித்த திரைப்படத்தில் முரளிதரன் கதாபாத்திரமேற்று நடிக்க முன்வந்த நடிகர் விஜய்சேதுபதி மீதான எதிர்ப்பாக உருமாற்றம் அடைந்து வலுப்பெற்றிருந்தது.

இந்நிலையில் குறித்த திரைப்படத்தில் இருந்து விலகிக்கொள்ளுமாறு முரளிதரனே விஜய் சேதுபதிக்கு பகிரங்க கடிதம் எழுதியிருந்தமை திருப்புமுனையாக அமைந்திருந்தது.

முரளிதரனின் கடிதம் வெளியாகி சிறிது நேரத்திலேயே அவரது கடிதத்தை பகிர்ந்து நன்றி வணக்கம் எனக் குறிப்பிட்டு தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் விஜய்சேதுபதி பதிவிட்டுள்ளார்.

நன்றி வணக்கம் எனக் குறிப்பிட்டுள்ளமை 800 திரைப்படத்தில் இருந்து விலகிக்கொள்ளுங்கள் என முரளிதரன் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டதற்கான அறிவிப்பாகவே கருதப்படுகிறது.

விரைவில் விலகல் குறித்த அறிவிப்பு விஜய்சேதுபதியிடம் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இளைய தளபதி விஜய் மற்றும் மாஸ்டர் திரைப்படக் குழுவினரும் 800 திரைப்பட பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்குமாறு விஜய்சேதுபதியிடம் கோரியதாக அறிய முடிகிறது.

இளைய தளபதி விஜய் நடிப்பில் தயாராகி கொரோனா முடக்கம் காரணமாக வெளியீடு தாமதமாகியிருந்தது. தற்போது வெளியீட்டுக்கான வேலைகள் நடந்து வருகையில் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய சேதுபதி நடித்திருப்பதால் பட வெளியீட்டில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் என்ற அடிப்படையில் மாஸ்டர் திரைப்படக் குழுவினர் இந்த வேண்டுகோளை விடுத்ததாக அறிய முடிகிறமை குறிப்பிடத்தக்கது.