புதினங்களின் சங்கமம்

பந்து விளையாடிய பிஞ்சுகள் நடுவே வெறியனே நீ குண்டுகளால் விளையாடி!!.

இங்கே கொலைகள் விற்கப்படும்!

பந்து விளையாடிய பிஞ்சுகள்நடுவே
வெடி குண்டுகளால்
விளையாடினானே வெறியன்.

சிலுவைப்பலி முடிந்ததென
சிரித்திருந்த மழலைகள் தோளில்
சிலுவையை ஏற்றினானே கொடூரன்.

பளிச்சிடும் சிரிப்பு கொடுத்த
பாலகரைக் கண்டபோதேனும்
வெடிக்கக் கொணர்ந்த
வெடிகுண்டை
விலக்க மனம் வரவில்லை அவனுக்கு.

யுத்தப் பசிக்கு இரையானோர்
ஓய்வெடுக்கும் போதினிலே
இரத்தப் பசிக்கு
இரையாகும் நிலையல்லவா?

கொலைகள்
விலைகள் பேசி
விற்கப்படுவதென்ன?

முயல்களின் நடமாட்டங்களை
முற்றும் அவதானித்தவர்கள்
முதலைகளை அனுமதித்ததென்ன?

ஆடுகளால் அச்சுறுத்தல் என
அனுதினம் பேசியவர்கள்
காண்டாமிருகங்களை
கணக்கெடுக்காததென்ன?

பத்தாண்டு முன்னே இந்த
பாவப்பட்ட பூமியிலே
செத்துத் தொலைந்த கதை
பத்தாண்டு பின் நமது
படியருகே நடப்பதென்ன?

பயங்கரவாதி வந்தாலும்
பாய்போட்டு இருத்திவைத்து
பாசமூட்டும் திருச்சபையை
பலவீனமாய் நினைத்ததென்ன?

ஆயுதம் தூக்கிடாது
அன்பையே தூக்குகிற
அடியவர்களை கொன்றொழித்த
அரக்கனைப் பெற்றதாரோ?
அவனுக்குப் பாலூட்டிய முலைகள்
சபிக்கப்பட்டவை.

எதிரிகள் நடுவே
ஏதுமறியா குழந்தையிருந்தால்
எதிரி இலக்கையும் தாக்கா
இரக்கமுளோர் வாழ்ந்த மண்ணில்
சாத்தானின் புதல்வன் வந்து
சவால் விடுப்பதென்ன?

தேகத்தை சிதைத்தாலும்
அவர்கள் ஆன்மாக்கள் நிலைத்திருக்கும்.
தேகங்களை சிதைத்தவன் ஆன்மா
நரகத்திலே குடியிருக்கும்.

யோ.புரட்சி,
காலை 09.46,
23.04.2019.
(இரத்தம் தோய்ந்த மண்ணிலிருந்து)

Image may contain: one or more people and people standingImage may contain: one or more people and outdoorImage may contain: 3 people, people smilingImage may contain: 1 person, textImage may contain: 3 people, people standingImage may contain: one or more people and people standing