புதினங்களின் சங்கமம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து முற்றாக வெளியேற்றப்பட்டார் மணிவண்ணன்?

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த வி.மணிவண்ணன் தற்போது கட்சியின் அனைத்து உறுப்புரிமைகளில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளதாக கட்சியை மேற்கோள்காட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரியவருகிறது.

தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் இருந்து மணிவண்ணனை நீக்குவதாக கட்சி தீர்மானித்ததாக தகவல்கள் வெளியாகிருந்த போதிலும் இரண்டு தரப்பும் உறுதிப்பாடான தகவல்களை வெளியிட்டுக்கவில்லை.

இந்நிலையில் புலம்பெயர் ஆதரவாளர்கள் சிலருக்கு மணிவண்ணன் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்த கருத்துக்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்த அதேவேளை சில குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கட்சியால் மணிவண்ணனுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதிகளும் வெளியாகிருந்தன.

இதேவேளை தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனத் தெரிவித்த மணிவண்ணன் தானே கட்சியின் தேசிய அமைப்பாளர் என்றும் ஊடகப் பேச்சாளர் என்றும் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். குறித்த ஊடகச் சந்திப்புக்கு முதல் நாள் கட்சி அலுவலகத்தில் ஊடகச் சந்திப்பினை அவர் மேற்கொள்ள முனைந்தபோது கட்சி அலுவலகம் மூடப்பட்டு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிந்தது தெரிந்ததே.

இதனிடையே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்காக புலம்பெயர் நாடு ஒன்றிலிருந்து அனுப்பப்படுகின்ற பணத்தினை கட்சியின் பெயரில் வங்கி இலக்கம் ஒன்றைத் திறந்து கணக்கினை பராமரிக்கலாமே என்று மணிவண்ணன் கேட்டது தான் பிணக்குகளுக்கான ஆரம்பம் என்று மணிவண்ணன் தரப்புத் தெரிவிக்கின்றது.

இதேவேளை மணிவண்ணன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக் கட்சியைப் பதிவு செய்யுமாறு வலியுறுத்துமாறு தமது ஆதரவாளர்களை சந்திக்கும் போது வலியுறுத்திவந்ததால் இது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு கட்சித் தலைமையால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தல் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்து மணிவண்ணன் நீக்கப்படுவதாக நேற்று தீர்மானம் எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட போதிலும் உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

இருந்தபோதிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவாளர்கள் என்ற சமூக வலைத்தளத்தின் நிர்வாகியாகச் (Admin) செயற்பட்டுவந்த மணிவண்ணன் இன்றைய தினம் நீக்கப்பட்டுள்ளமை குறித்த முடிவை உறுதிப்படுத்துவதாக இருப்பதாக தாம் கருதுவதாகத் தெரிவிக்கின்றனர் மணிவண்ணன் ஆதரவாளர்கள்.