புதினங்களின் சங்கமம்

யாழில் வடிவேல் பாணியில் கிணத்தை காணோம் முறைப்பாடு!! கண்டுபிடித்த பிரதேச சபை-

நெடுந்தீவு கிழக்கு பகுதியில் இருந்த பொதுக் கிணத்தை காணவில்லை என பொதுமகன் ஒருவரால் நெடுந்தீவு பிரதேச சபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து விரைந்து தேடுதல் நடத்திய நெடுந்தீவு பிரதேச சபை தனியார் ஒருவரால் அடாத்தாக அபகரிக்கப்பட்டமையை கண்டறிந்து எச்சரித்துள்ளது.
நெடுந்தீவு கிழக்குப் பகுதியில் மக்களின் பாவனைக்கென வெடிச்சான் கேணியுடன் சேர்த்து பொது கிணறு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
குறித்த கிணற்றை பிரதேச சபையின் அனுமதியின்றி தனியார் ஒருவர் தனது காணிக்குள் அபகரித்து வேலியமைத்துள்ளார்.
குறித்த கிணற்றுக்கு குளிக்கச் சென்ற ஒருவர் கிணற்றைக்காணாது குழம்பிய நிலையில் பிரதேச சபையிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன் பின்னர் விழிப்படைந்த பிரதேச சபை பொதுக் கிணற்றினை தனியார் ஒருவர் அடாத்தாக அபகரித்தமையினை கண்டறிந்து ஒருவார காலத்தினுள் கிணற்றை விடுவிக்கவும் குறித்த கிணற்றிலிருந்து நீர்ப்பம்பி மூலம் நீர் எடுப்பதை உடனடியாக நிறுத்தவும்; உத்தரவிட்டுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் நல்லதம்பி சசிகுமார் உறுதியளித்தார்.