இலங்கையில் கடற்படை சிப்பாய்கள் 578 பேருக்கு கொரோனா! 1000 கடந்தது கொரோனா!
அம்பாறை மாவட்டம் ஒலுவில் துறைமுக பகுதியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 28 கடற்படையினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இலங்கையில் கொரோனா பாதித்தவர்களது எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து 1,020 ஆக அதிகரித்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.
(2ம் இணைப்பு)
இன்று மாலை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜா-எல பிரதேசத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட 80 கடற்படையினர் ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் ஏலவே 10 கடற்படையினர் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வெலிகந்தை வைத்தியசாலை மற்றும் கொழும்புக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் தனிமைப்படுத்தல் முகாமில் வைக்கப்பட்டுள்ள ஏனைய 70 கடற்படையினரின் மருத்துவ மாதிரிகள் பெறப்பட்டு இன்று (மே-19) பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதனைத் தொடர்ந்து 28 கடற்படையினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதியாகியுள்ளது.
இவர்கள் அனைவரும் தற்போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை அடையாளம் காணப்பட்ட 1020 பேரில் 578 பேர் கடற்படையினர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இன்று புதிதாக அடையாளம் காணப்பட்ட 28 பேரும் கடற்படையினர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள கடற்படையினரில் 209 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும், ஏனையோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் கடற்படையின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

