அதிதீவிர புயலாக வலுவடைந்துள்ள ஆம்பன்! கடும்மழை, பலத்தகாற்று வீசுமென எச்சரிக்கை!
ஆம்பன் சூறாவளி தற்போது மிகஅதி தீவிர புயலாக சூறாவளியாக வலுவடைந்திருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று நண்பகல் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் ஆம்பன் சூறாவளியானது மிக அதி தீவிர சூறாவளியாக விருத்தியடைந்து இன்று அதிகாலை 02.30 மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 740கி.மீ தூரத்தில் தென்வங்காள விரிகுடா மத்திய பகுதி கடற்பரப்புகளுக்கும் அண்மையாகவுள்ள கடற்பரப்புகளுக்கும் மேலாக மையம் கொண்டிருந்தது.
இது அடுத்து பாரிய சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தொடா்ந்து 20 ஆம் திகதியளவில் வடக்கு – வட கிழக்கு திசையில் மேற்கு வங்காள கரையைநோக்கி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இத்தொகுதியின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும், குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சில இடங்களில் 150மி.மீக்கும் அதிகமான மிகப் பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாடுமுழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தென், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அடுத்த 12மணித்தியாலங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடியமழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சிலஇடங்களில் 150மி.மீக்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமத்திய,கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில்அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள்அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

