புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவில் அரச சம்பளம் பெறும் ஒருவருக்கு 20 மாதங்களாக சமுர்த்தி கொடுப்பனவு!-

20 மாதங்களாக சமுர்த்தி கொடுப்பனவு பெற்று வந்த அரச உத்தியோகத்தர் ஒருவர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த நபர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் அரசியல் செயற்பாடுகளை கிராம மட்டத்தில் முன்னெடுத்து வருபவர் என தகவல்கள் கசிந்துள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட இந்துபுரம் கிராம சேவையாளர் பிரிவில் செல்வபுரம் கிராமத்தில் குறித்த மோசடி இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் மேசன் தொழிலாளராக நியமனம் பெற்று அரச ஊதியம் பெற்று வந்த நிலையில் இவ்வாறு சமுர்த்தி கொடுப்பனவினையும் பெற்று வந்துள்ளமை அம்பலமாகியுள்ளது.

2018 ம் ஆண்டு நடுப்பகுதியில் அரச நியமனத்தை பெற்றுக்கொண்ட அவர் இவ்வாறு சமுர்த்தி பயனாளிகளிற்கென வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவினையும் பெற்று வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

குறித்த கிராம சேவையாளர் பிரிவில் 180 பேர் சமுர்த்தி பயனாளிகளாக உள்ளதுடன், 146 பேர் சமுர்த்தி கொடுப்பனவிற்கான காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் பல குடும்பங்கள் சமுர்த்தி பயனாளிகளாக காத்திருப்போர் பட்டியலில் உள்ள சூழலில்; குறித்த அரச உத்தியோகத்தர் உண்மைகளை மறைத்து சமுர்த்தி கொடுப்பனவினையும் பெற்று வந்துள்ளார்.

குறித்த நபரின் கையொப்பத்தில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரினால் பலமுறை அவரது தொழில் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ள போதிலும் அவர் உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கியுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தெரிவிக்கின்றார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தாம் விசாரணைகளை தற்போது ஆரம்பித்துள்ளதாகவும், குறித்த நபரை பயனாளிகள் பட்டியலிலிருந்து நீக்கி காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயனாளி ஒருவரை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் பிரதேசத்திற்கு பொறுப்பாக உள்ள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபர் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கென வழங்கப்பட்ட 5000 ரூபா பணத்தினையும் பெற்றுள்ளமையையும் அவர் உறுதி செய்துள்ளார்.