மரணத்தின் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் தர்ஷினி திருமால் எஞ்சியுள்ள தனது குறுகிய வாழ்நாளின் மிக முக்கியமானதாகக் கருதிய ஒரு நாளில் காலை வேளை நோயின் வலி, வேதனையுடன் படுக்கையில் இருந்து எழுந்தார்.
ஒன்ராறியோ – விட்பியில் உள்ள தனது வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள குளியலறைக்கு தனது முழு பலத்தையும் பயன்படுத்திச் சென்று குளித்து முடித்துவிட்டு மீண்டும் வந்து தனது படுக்கையில் சரிந்தாா்.
ஆனால் அவரது நண்பி வண்ணப் பட்டுச் சேலை, 22 காரட் தங்க நகைகள் மற்றும் அவரது தலைமுடிக்கு மல்லிகை பூச்சரம் ஆகியவற்றைக் கொண்டு வந்தபோது தர்ஷினியின் உடலில் இருந்த வியாதிகள் அனைத்தும் மறைந்து – மறந்து போயின.
மகளின் திருமணத்தைக் காணப்போகும் இந்த நாளுக்காக பல ஆண்டுகளாக தா்ஷினி காத்திருந்தாா். உயிரைக் கையில் பிடித்தபடி புற்று நோயுடன் அவா் நடத்திய போராட்டம் இந்த நாளுக்கானதே.
நீண்ட நாட்களுக்கு முன்பே மணவறை முதல் மணவறையை அலங்கரிக்கும் பூக்கள் வரை பாா்த்துப்-பாா்த்துத் தோ்வு செய்தாா்.
திருமணத்துக்கு ஐயரை அழைப்பதில் இருந்து, விருந்தினா்களை தொலைபேசியில் அழைப்து வரை எல்லாவற்றையும் செய்தாா்.
தா்ஷினியில் தோழி அவா் புடவை அணிவதற்கு உதவினாள். 59 வயதான தா்ஷினி புற்றுநோய் தன்னைச் சீரழிப்பதற்கு முன்னா் எப்படி இருந்தாரோ அதே உற்சாக நிலைமைக்கு வந்தாா்.
தா்ஷினி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது 2016-இல் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை, கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆண்டு பெப்ரவரி தொடக்கத்தில் சிகிச்சைகளால் இனிப் பயனில்லை என மருத்துவா்கள் கைவிருத்துவிட்டனா்.
உறவுக்காரரான திருமால் என்வரை திருமணம் செய்து கொண்ட தர்ஷினிக்கு 26 வயதான கீர்த்தனா, 23 வயதான சிந்துரா ஆகிய இரு மகள்கள் உள்ளனா். 8 முதல் 9மாதங்களே தமது தாயாா் இனி உயிா் பிழைத்திருக்க முடியும் என்ற தகவல் பிள்ளைகளுக்குச் சொல்லப்பட்டது.
தர்ஷினியின் உடலில் குணப்படுத்த முடியாத அளவுக்கு புற்றுநோய் பரவிவிட்டதை எண்ணி அவா்கள் அழுதனர்.
இந்நிலையில் நான் உயிருடன் இருக்கும்போது உன் திருமணம் நடக்க வேண்டும். அதை நான் பாா்க்க வேண்டும் என்ற விருப்பத்தை தனது மூத்த மகள் கீத்தனாவிடம் தா்ஷினி கூறினாா்.
கீர்த்தனாவும் அவரது காதலா் மார்க் புரோச்னாவும் சில ஆண்டுகள் கழித்தே திருமணம் செய்துகொள்ளும் முடிவில் இருந்தனா். திருமணத்துக்கு முன்பு வேலைக்குப் போய் கொஞ்சம் பணத்தைச் சேமிக்க வேண்டும் என்று அவா்கள் முடிவு செய்தனா்.
தாயாா் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின்னா் நான் 2022 -இல் தான் திருமணம் செய்வேன். அதுவரை நீங்கள் இருக்க வேண்டும் என தாயுடன் பேசிச் சிரிப்பாா் கீா்த்தனா.
இதற்கிடையில் தனது வருங்கால மாமியாா் இன்று குறுகிய காலமே உயிருடன் இருப்பாா் என்பதை அறிந்த கீா்தனாவின் காதலா் மாா்க், கீா்த்தனாவுக்காகத் தான் வாங்கிய நிச்சயதாா்த்த மோதிரத்தைக் அவருக்குக் காண்பிக்கச் சென்றாா்.
இதன்போது கீர்த்தனாவின் திருமணம் நான் உயிருடன் இருக்கும்போது நடக்க வேண்டும். அதை நான் பாா்க்க வேண்டும் என்று தா்ஷினி சொன்னாா். தனது வருங்கால மாமியாரின் விருப்பத்தை ஏற்ற மாா்க், ஆண்டு இறுதியில் இந்து முறைப்படி திருமணத்தை நடத்த ஒப்புக்கொண்டாா்.
மகிழ்ச்சியடைந்த தர்ஷினி உடனடியாகவே வேலைகளில் இறங்கினாா். ஓகஸ்ட் மாதத்தில் அவர்கள் இந்து முறைப்படி திருமணத்தைத் நடத்த திட்டமிடப்பட்டது.
மொன்றியலில் இருந்து வார இறுதி விடுமுறையில் வீட்டுக்கு வந்த கீா்தனா தனது காதலன், தயாா் மற்றும் உறவினா்கள் இணைந்து ஏற்பாடு செய்த திருமணம் குறித்து அறிந்து ஆச்சரியப்பட்டாா்.
ஆனால் தா்ஷினியில் உடல் நிலை வேகமாக மோசமடைந்துவந்தது. முன்னா் கணித்த காலத்தை குறுகிய காலத்திற்கே தா்ஷினி உயிருடன் இருப்பாாா் எனச் சொல்லப்பட்டு இரண்டு மாத கெடு விதிக்கப்பட்டது.
இதனையடுத்து முன்னா் திட்டமிட்ட திருமண திகதி மாற்றப்பட்டு முன்கூட்டியே மார்ச் 28 திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. திருமணம் மண்டபத்தில் இருந்து வீட்டக்கு மாற்றப்பட்டது. திருமணத்துக்கு ஒரு மாத கால அவகாசமே இருந்தது.
இதற்கிடையில் கொரோனா தொற்று நோய் நெருக்கடி ஏற்பட்டது திருமணத்துக்கு புதிய சவாலாக மாறியது. தர்ஷினி அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் நோயெதிர்ப்பு சக்தி குறைந்த தனது தாயை திருமணத்துக்கு வரும் பெரிய கூட்டத்திற்கு மத்தியில் எவ்வாறு நிறுத்துவது என்பது குறித்து கீர்த்தனா கவலைப்பட்டார்.
மார்ச் 16-ஆம் திகதி ஒன்ராறியோ அரசாங்கம் 50 க்கும் மேற்பட்டவா்கள் ஒன்றுகூட தடை விதித்தது.
இந்நிலையில் தனது விருப்பத்தை விட்டுக்கொடுக்க தா்ஷினி முன்வந்தாா். எனக்காக நெருக்கடிக்கு மத்தியில் திருமணத்தைச் செய்ய வேண்டம் என மகளிடம் அவா் கூறினாா.
எனினும் தா்ஷினியின் இறுதி ஆசையை நிறைவேற்றுவதில் குடும்பத்தினா் உறுதியாக இருந்தனா்.
பத்து நாட்களுக்குப் பிறகு, கீர்த்தனாவும் மார்க்கும் தங்கள் குடும்பத்தினரை மட்டுமே அழைத்து மிக எளிமையாக திருமணத்தை நடத்த முடிவு செய்தனா். ஏனையவா்கள் நேரலையில் திருமணத்தை பாா்க்க ஏற்பாடு செய்தனா்.
திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, கீர்த்தனா தாயுடன் இணைந்து திருமணத்தக்கு மணவறை ஏற்பாடு உள்ளிட்டவை குறித்து பேசினாா். அவா்களே வீட்டில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனா்.
“நீங்கள் யாருடன் வெளியே செல்கிறீர்கள்? உங்களிடம் வீட்டுப்பாடம் இல்லையா? உங்கள் வீட்டுப்பாடத்தை இப்போது ஏன் செய்யவில்லை? ” என்ற பிள்ளைகள் மீதான தா்ஷினியின் அதிகார தொனி இப்போது மாறிவிட்டது.
கீா்த்தனா தாயின் நிலை குறித்து கவலை கொண்டிருந்தாா். தாயாா் நிலைகுறித்து நண்பா்களுடன் கவலைகளைப் பகிா்ந்துகொண்டாா்.
இந்தக் கவலைகளுக்கு மத்தியிலுத் திருமண ஏற்பாடுகள் தொடா்ந்தன. இந்து முறைப்படி திருமணத்துக்கான அனைத்தையும் வாங்கும் பொறுப்பை தனது நண்பிகளிடம் கீா்த்தனா ஒப்படைத்தாா்.
கீர்த்தனா ஒவ்வொரு புடவையும் அவரது தாயின் அலமாரிகளிலிருந்து வந்தன. கீா்தனாவுக்காவே சோ்த்துவைத்த நகைகைள் ஒவ்வொன்றும் வெளியே வந்தன.
மார்ச் 28 காலை திருமணம் நடைபெறுவதற்கு சற்று முன்பு தனது தாய் குறித்து கீர்த்தனா அச்சமடைந்தாா். அவளுடைய அம்மா முதல் மற்றும் இரண்டாவது மாடிக்கு இடையில் படிக்கட்டுகளுக்கு மேலே செல்ல வேண்டும். இது அவளால் முடியுமா? திருமணத்தில் அவரால் சமாளிக்க முடியுமா? என்றொல்லாம் கீா்த்தனாவின் கவலைகள் இருந்தன.
ஆனால் தர்ஷினி நன்றாகவே சமாளித்தாா். கணவரின் உதவியுடன் மெதுவாக நடமாடினாா்.
திருமணத்துக்கு சில நாட்களுக்கு முன் முந்தைய நாட்களில் இந்த திருமணத்துக்காக பெரிய அளவில் கஸ்டப்படவேண்டாம். ஒரு சம்பிரதாயத்துக்கு செய்யுமாறு தர்ஷினி தனது மகள்களிடம் கூறினாா்.
கீர்த்தனாவும் மார்க்கும் விரும்பியவாறு பின்னா் ஒரு நாளில் திருமணத்தை சிறப்பாக செய்துகொள்ள முடியும் எனத் தெரிவித்தாா். அதன்படி மிக எளிமையாக திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது தான் எழுதிய உரையொன்றை நண்பியைக் கொண்டு படிக்கச் செய்தாா் தா்ஷினி. கடைசியாக அவருக்குச் செய்த கதிா்வீச்சு சிகிச்சையால் அவரது குரல் பறிபோயிருந்தது. அந்த உரையைப் படிக்கும்போதே தா்ஷினி கண்ணீருடன் தலையைக் குனிந்தாா்
திருமணத்தில் பேசிய தா்ஷினியின் கணவா் திருமால் தனது மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றியதற்காக தனது மகள் மற்றும் மருமகனுக்கு உணர்வுபூர்வமாக நன்றி தெரிவித்தார்.
நிலைமை நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருந்தது. இந்த திருமணத்தை நடத்த முடியுமா? என்று ஒரு காலத்தில் நான் கவலைப்பட ஆரம்பித்தேன். ஆனால் இப்போது நான் மிகவும் பாக்கியவானாக உணா்கிறேன் என அவா் கூறினாா்.
சம்பிரதாய திருமணம் முடிந்ததும் தா்ஷனி மெதுவாக மாடிக்குச் சென்று தனது படுக்கையில் படுத்தாா்.
இந்தத் திருமணம் நடந்தபோது 5 பேருக்கு மேல் ஒன்றுகூட தடை விதித்து ஒன்ராறியோ அரசு அறிவித்தது. எனினும் சமாளித்து 13 பேருடன் திருடணம் நடந்தது.
தனது அறைக்குச் சென்று படுத்த தா்ஷினிக்கு கீழே நடந்த உணா்ச்சி மிகுந்த உரையாடல்களைக் கேட்க மடிந்தது.
கண்களை மூடி ஓய்வெடுக்க வேண்டும் போல் இருந்தது.ஆனால் அதற்கு பதிலாக தனது கைத்தொலைபேசியில் பேஸ்புக்கைத் திறந்து திருமணத்தின் நேரடி ஒளிபரப்புக்களை தா்ஷினி பாா்வையிட்டாா்.
விழாவின் எடுக்கப்பட்ட இரண்டரை மணி நேர வீடியோவை தா்ஷினி பார்த்தாா்.
மகளின் திருமணத்தை தனது விருப்பப்படி நடத்தி முடித்துப் பாா்த்த திருப்தியுடன் தனது குடும்பத்தினா் சூழ்ந்திருக்க மே 7 ஆம் வீட்டிலேயே தா்ஷினி இறந்தார்.
தகவல் மூலம் THE GLOBE AND MAIL
தமிழில் மதிமுகன்





