புதினங்களின் சங்கமம்

கொரோனாவின் தாக்குதல் எதிர்காலம் தெரியாது!! யாழில் தொடர் ஊரடங்கு அமுல்!!

“யாழ். மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவது தொடர்பாகவும், கொரோனா தாக்கத்தின் எதிர்காலம் தொடர்பாகவும் இப்போது எதனையும் கூற இயலாது. அதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்” என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சமூக மட்டத்தில் கொரோனா தொற்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை. தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கே அடையாளம் காணப்படுகின்றது. எனவே, நாம் பாதுகாப்பாக இருக்கவேண்டும் எனவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

போதனா வைத்தியசாலையில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊரடங்கு தளர்வு மற்றும் தற்போதைய நிலமைகள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“சுகாதார அமைச்சு, கொரோனா எதிர்ப்பு செயலணி, உயர்நிலை சுகாதார அதிகாரிகள் போன்றவர்களாலேயே ஊரடங்கு தொடர்பான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அவர்களுக்கு எங்களுடைய கருத்துக்களை கூறுகிறோம். எங்களுடைய பணி நோயாளர்களைக் கண்டறிவதும், சிகிச்சையளிப்பதுமே.

மேலும், பொதுவான ஒரு நடைமுறையை அரசாங்கம் பின்பற்றுமாறு கூறினால், அதனை நாங்கள் பின்பற்றவேண்டும். எனவே, ஊரடங்கு தளர்வு பற்றியும், நோயின் எதிர்காலம் பற்றியும் இப்போதைக்கு எதையும் கூற இயலாது. பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

வட மாகாணத்தில் நோயாளர் எண்ணிக்கை குறைவு மற்றும் தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் மாத்திரமே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த வகையில் நாம் பாதுகாப்புடன் இருக்கிறோம். இனியும் பாதுகாப்பாக இருக்கவேண்டும். “என்றார்.

யாழ். மாவட்டத்தில் நேற்று 8 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே யாழில் அமுல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.